கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல்

🕔 March 13, 2017

ண்டியில் இருவேறு தொழில்சாலைகளில் 15 லட்சத்து 90 ஆயிரம் தரமற்ற தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றினர்.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட இந்த தீப்பெட்டிகள்  சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியாவையாகும். 

பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற தலா 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொதிகளில், 14 லட்சத்து 40,000   சிறிய தீப்பெட்டிகள் இருந்ததாக நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். அவற்றின் சந்தைப்பெறுமதி 86 லட்சத்து 40,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டிபல்லேகலையிலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து, 09 லட்சம் ரூபாய் பெறுமதியான 1 லட்சத்து 50,000 தீப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவித்த போது;

நுகர்வோரின் நன்மை கருதி அநேகமான பொருட்கள் தரச்சான்றிதழ் அனுமதி பெற்ற பின்னரே தயாரிக்கப்பட வேண்டுமென்பதில் நுகர்வோர் அதிகார சபை உறுதியாக உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட விதி முறைகளை மீறி தரச்சான்றிதழ் பெறாது உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கண்டுபிடித்து உரிமையாளர்களுக்கு எதிராக தீவிர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளோம் என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன கருத்து தெரிவிக்கையில், சட்டத்தை மீறிய தீப்பட்டி உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.

Comments