சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்

🕔 February 28, 2017
சைட்டம் தனியார் மருத்துவ  பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், விசாரிக்கப்பட்டமையின் பின்னர் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக காண்பிப்பதற்காகவே குறித்த சம்பத்தை, சமீர திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சமீர சேனாரத்னவின் காரின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டது. அதில் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாக சமீர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து 9 மி.மீ. கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான 02 ரவைகள், 3.8 வகை ரிவோல்வர் மற்றும் அதற்கான 3 ரவைகள், அத்துடன் குறித்த குற்றத்தை மேற்கொள்ளவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தை திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் மாகாண சபையில் கடமைபுரியும் சாரதி ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளபோதிலும், குறித்த இருவரும் தாம் வசிக்கும் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசசபை உறுப்பினர், வைத்தியர் சமீர சேனாரத்னவுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர் எனவும் இவ்விருவருக்கிடையேயும் நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டமை குறித்து, உறுதியான தகவல்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், வைத்தியசர் சமீர சேனாரத்னவை, விசேட பொலிஸ் குழுவினர் நேற்றைய தினம் மிக நீண்ட விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்