ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம்

🕔 February 25, 2017

– எம்.ஐ. எம். தாரிக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள பதவியாக இருந்து வந்த, அந்தக் கட்சியின் செயலாளர் பதவியானது, தற்போது வெறும் எடுபிடிப் பதவியாக மாறியுள்ளதாக பலரும் விமர்சனைங்களை முன்வைத்து வரும் நிலையில், அதனை உண்மைப்படுத்துவது போல், இன்று கண்டியில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது.

மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை கண்டியில் நடைபெற்றது. இதன்போது, கட்சியின் தலைவர் அமர்ந்திருந்த முன் மேசை ஆசனங்களில் கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ. காதருக்கு இடம் மறுக்கப்பட்டிருந்ததோடு, அவர் – செயலமர்வில் கலந்து கொண்டோருடன் பத்தோடு பதினொன்றாக அமர வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. இதன் மூலம், மு.கா.வின் செயலாளர் பதவிக்கு,  அந்தக் கட்சிக்குள் என்ன மரியாதை உள்ளது என்பதை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது என்று, செயலமர்வில் கலந்து கொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக எம்.ரி. ஹசனலி பதவி வகித்த போது, கட்சித் தலைவருக்கு அடுத்த ஆசனத்தில் அவர் அமர்வார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் செயலாளர் பதவிக்கு, அப்போது அவ்வாறானதொரு மதிப்பும், மரியாதையும் இருந்தது.

ஆனால், தற்போது மு.கா. செயலாளர் மன்சூர் ஏ. காதர், ரஊப் ஹக்கீமுடைய எடுபிடிபோல் பணியாற்றுவதோடு, அவர் வகிக்கும் செயலாளர் பதவிக்கான அத்தனை அதிகாரங்களும், யாப்புத் திருத்தங்களினூடாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

குறிப்பாக, மு.கா. செயலாளர் பதவிக்குரிய நபரை, மு.கா. தலைவரே நியமிப்பார் என்று, கட்சியின் யாப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, செயலாளராகக் கடமையாற்றுகின்றவருக்கு சம்பளம் வழங்கும் நடைமுறையும் மன்சூர் ஏ. காதர் பதவியேற்றமையினை அடுத்து இருந்து வருகிறது. இதனால், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமின் ஓர் ஏவலாளியாகவே அந்தக் கட்சியின் செயலாளரான மன்சூர் ஏ. காதர் செயற்படும் நிலைவரமொன்று உருவாகியுள்ளது. மேலும், செயலாளர் நாயகமாக ஹசனலி இருந்த போது வழங்கப்பட்ட மரியாதையின் ஒரு துளிகூட, தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதருக்கு ஹக்கீம் வழங்குவதில்லை எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

மு.காங்கிரசின் செயலாளராகக் கடமையாற்றும் மன்சூர் ஏ. காதருக்கு, தனது பிரத்தியேக செயலாளர் ஒருவருக்கு வழங்கும் இடத்தை விடவும், குறைந்தளவானதொரு இடத்தினையே ரஊப் ஹக்கீம் கொடுத்து வருகின்றமையானது, இன்றைய நிகழ்வில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது என, செயலமர்வில் கலந்து கொண்ட, மு.கா.வின் சாய்ந்தமருதைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர் ஒருவருடன் உரையாடும்போது தெரிவித்தார்.

மேலும், அம்பாறை மாவட்டத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அதிகாரம் மிக்க செயலாளர் பதவியினை ரஊப் ஹக்கீம் திட்டமிட்டு இல்லாமல் செய்து விட்டு, இப்போது உருவாக்கப்பட்டுள்ள அதிகாரமற்ற வெற்றுச் செயலாளர் பதவிக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர் ஏ. காதரை நியமித்துள்ளார். ஆனாலும், அந்தப் பதவிக்கான மரியாதையைக் கூட, மன்சூர் ஏ. காதருக்கு ஹக்கீம் வழங்காமல் இப்படி அவமானப்படுத்துவது, அம்பாறை மாவட்ட மக்களுக்கான அவமானமாகும் என்றும், மேற்படி  சாய்ந்தமருதைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர் தெரிவித்தார்.

இருந்தபோதும், ஹசனயின் செயலாளர் நாயகத்துக்கான அதிகாரங்களை சூழ்ச்சிகரமாக ஹக்கீம் பறித்தெடுப்பதற்கு, மன்சூர் ஏ. காதர் துணை போனதாக மு.கா.வின் மேற்படி உயர்பீட உறுப்பினர் சுட்டிக்காட்டியதோடு, மன்சூர் ஏ. காதருக்கு இந்த அவமானம் தேவையானதுதான் என்றும் கூறினார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தவர்கள் மீது ஹக்கீமுக்குள்ள வக்கிர உணர்வினை, மன்சூர் ஏ. காதரை இவ்வாறு அசிங்கப்படுத்துவதன் மூலம் வெளிப்படுத்துகிறார் என எண்ணத் தோன்றுகிறது என்றும், குறித்த உயர்பீட உறுப்பினர் மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்