என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி

🕔 February 17, 2017

President - 008“சேர் நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்கின்றேன். என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என்று, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னிடம் கூறினார் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரகாபொல வைத்தியசாலை கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்ட ஜனாதிபதி, அங்கு உரையாற்றினார். இதன்போதே, மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

“நான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து, 24 மணித்தியாலங்கள் கடந்ததன் பின்னர், அப்போதைய பிரதம நீதியரசர் என்னை சந்தித்தார்.

‘என்னை பணி நீக்காவிட்டால் நீங்கள் சொல்லும் எல்லாக் காரியங்களையும்  செய்கின்றேன்’ என, பிரதம நீதியரசர் கூறினார். இந்த விடயம் பற்றி இதுவரையில் நான் வெளிப்படுத்தியது கிடையாது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி இரவு, எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அப்போதைய பிரதம நீதியரசர் வந்தார். என்னை வாழ்த்துவதற்காக அவர் வந்திருக்கின்றார் என்று நான் நினைத்தேன்.

‘சேர் என்னை நீக்கப் போவதாக தகவல் கிடைத்தது, நீங்கள் சொல்லும் வகையில் செயற்படுகின்றேன் என்னை நீக்க வேண்டாம்’ என பிரதம நீதியரசர் சொன்னார்.

நான் சொல்லும் வகையில் வழக்குத் தீர்ப்புக்களை வழங்குவதாகவே அவர் வாக்குறுதியளித்தார். இதன் மூலம் கடந்த காலங்களில் எவ்வாறு வழக்குத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

பிரதம நீதியரசரை பணி நீக்குவதற்கு, அப்போது நான் தீர்மானித்திருக்கவில்லை. மறுநாள் எனக்கு அறிவிக்காமலேயே, இல்லத்திற்கு வந்து முதல்நாள் கூறிய விடயத்தையே மீண்டும் சொன்னார்.

இவ்வாறான ஓர் நபரை இந்தப் பதவியில் தொடர்ந்து வைத்திருப்பது, நாட்டின் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடும் என்பதனை, நான் உணர்ந்து கொண்டேன்

இதனால் பிரதம நீதியரசரை பணி நீக்கத் தீர்மானித்தேன், என்னுடைய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் அதுவாகும்.

சிலர் அரசாங்கம் என்ன செய்தது என கேள்வி எழுப்புகின்றனர், கடந்த கால முறைகளையும் தற்போதைய முறைகளையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்