பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

🕔 February 15, 2017

Basheer - 0245– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பசீர் சேகுதாவூத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்குரிய திகதி, கட்சியின் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்று, செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, ஒழுக்காற்று விசாரணையினை ஆவலோடு எதிர் பார்த்திருப்பதாக, இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் அறிவித்துள்ளார்.

பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியதாக கடிமொன்றின் மூலம் மு.கா. அறிவித்திருக்கிறது. ஆனாலும், என்ன வகையான குற்றங்களை மேற்கொண்டமையினால் பசீரை இடை நிறுத்தியதாக கடிதத்தில் விபரமாகத் தெரிவிக்கப்படவில்லை. கட்சியின் கொள்கைக்கு முரணமாக நடந்தமை என்று மட்டுமே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பசீரிடம் ஒழுக்காற்று விசாரணை நடைபெறும் போது, அவர் தன்னிடமுள்ள பல ஆதாரங்களை விசாரணைக் குழுவினரிடம் வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையானது, ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்காக மாறிய கதை’யாகி விடும் நிலையொன்றினை உருவாக்கி விடலாம்.

பசீர் தன்னிடம் இருப்பதாகக் கூறும் வீடியோக்களையும், வேறு ஆதாரங்களையும் விசாரணைக் குழுவினரிடம் காட்டினால்; தலைவரும், ஏனைய முக்கியஸ்தர்களும் ஆடிய லீலைகள் அம்பலமாகும் நிலைவரம் ஏற்படும். அப்போது, பசீரை விசாரிக்க வந்த குழுவினர் என்ன செய்வார்கள் என்பதே இங்குள்ள கேள்வியாகும். குற்றம் செய்தார் என்று கூறிய பசீரைத் தண்டிப்பார்களா, அல்லது குற்றத்தைச் செய்த தலைவரையும் ஏனைய முக்கியஸ்தர்களையும் தண்டிப்பார்களா?

ஏற்கனவே, தனக்கும் ஒரு பெண்ணுக்குமிடையில் கள்ளத் தொடர்பு இருந்ததை, இம்மாதம் 04ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் மு.கா. தலைவர் மிகப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் முன்னிலையிலும் இந்தக் குற்றத்தினை மு.கா. தலைவர் ஏற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.

மு.காங்கிரசினதும், அதன் உறுப்பினர்களதும் நடவடிக்கைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றினை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்று, மு.காங்கிரசின் யாப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பினை வைத்திருந்ததாக அந்தக் கட்சியின் தலைவரே ஏற்றிருக்கிறார். அப்படியானால், இதுவும் கட்சியின் விதிமுறைக்கு முரணான விடம்தான் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. எனவே, மு.கா. தலைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற முணுமுணுப்பு கட்சியின் உயர்பீடத்திலேயே உள்ளது.

விபச்சாரம் செய்ததாகச் சொல்பவரை வீரனாகவும், அதைப் படமெடுத்ததாகச் சொல்கின்றவரைப் பாவியாகவும் பார்க்கும் அபத்தங்களுக்கு இடையில், பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் எவ்வாறான முடிவினை எட்டும் என்பதை அனுமானிப்பது ஒன்றும் சீன வித்தையாகத் தெரியவில்லை.

Comments