தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்
🕔 February 7, 2017


– எம்.வை. அமீர் –
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு அமைய, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் – ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் முற்றலில் மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்,ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல விடயங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி இந்த அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தலைவர் வை. முபாறக் தலைமையில் இந்த முழுநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இதன்போது ஊழியர் சங்க தலைவர் முபாறக் கருத்துத் தெரிவிக்கையில்;
“பல்கலைக்கழக சகல தரங்களையும் உள்ளடக்கிய கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட 460 மில்லியன் பணத்தினூடாக ஜனவரி 31 க்கு முன்னர் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கல்விசாரா ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும்.
எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுபோனால், எதிர்வரும் பெப்ரவரி 15 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்குவோம். இதற்கான தீர்மானத்தினை அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனம் எடுத்துள்ளது.
மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மனோநிலை எங்களிடம் இல்லை. கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயப்பாடுகளை மாணவர்களும் புரிந்துகொள்வார்கள். நியாயமான எங்களின் கோரிக்களிகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு கல்விசார், நிர்வாக உத்தியோகத்தர்களும் மற்றும் மாணவர்களும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

Comments

