சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு

🕔 January 23, 2017

Mahinda Rajapaksa - 054மஷ்டியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து விட்டுத்தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆயினும், அவ்வாறான விடயங்களுக்கு உடன்பாடில்லாத காரணத்தினால்தான், குறித்த வரி தொடர்பில் அவதானம் செலுத்தவில்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் மாநாடு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்த அரசாங்கம் எம்மை அடக்கியாள நினைத்தால் அது பயனளிக்காது. அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பதை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பார்த்ததுள்ளனர். அம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை துறைமுகம், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை, கொழும்பு என சகல பிரதேசங்களிலும் உள்ள வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இவற்றை தடுத்து நிறுத்துவதோடு, பழிவாங்கல் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மைத்திரி – ரணில் அரசு, நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவித்து, மக்கள் மத்தியில் குரோதத்தை வளர்க்கின்றது. இன்று நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாட்டு மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொள்ளாத அரசாங்கத்தில், ஓரினச் சேர்க்கை குறித்த அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளனர். அமைச்சரவைக்கு வந்த பின்னரே குறித்த கோரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்பட்ட சகல நிபந்தனைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சமஷ்டி, காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல், போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை பங்கேற்கச் செய்தல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் என, பல விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

இவ்விடயங்களுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நான் இணங்கியிருந்தால், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்திருக்கும். எனினும் நாம் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு தயாராக இருக்கவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்