ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

🕔 January 16, 2017

 

Rajitha - 011டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வித்திட்டத்தில் பயின்ற 24 மாணவர்களில் 22 பேர் பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன மன்றம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப்பிரிவில் க.பொ.த உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வகுப்புககள் நடத்தப்பட்டன.

இவ்வாறு பல்கலைக்கழகம் தெரிவான 22 பேரில் 0பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

இது குறித்து டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் தர்கா நகர் பிரிவின் தலைவரும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி எம்.எஸ்.எம். ரூமி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் உயர்தர விஞ்ஞான நெறியில் கற்கும் மாணவர்கள் தமது பாடசாலை மட்டத்தில் போதிய கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து நாட்டின் தலைநகரைச் சுற்றியுள்ள பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்லும் வழக்கம் வெகு காலமாக இருந்து வந்தது. சன நெரிசல் மிகு வீதிப் போக்குவரத்து காரணங்களால் இம்மாணவர்களில் பலர் களைத்துப் போய் வீடு திரும்புவதால் அன்றாடம் அவர்கள் கற்கும் கல்வி நிலை பாதிக்கப்பட்டது. இன்னும் சில மாணவர்கள் தூரப் பிரயாண வசதியீனத்தின் காரணமாக உயர்தரக் கல்வியை தமது பாடசாலை மட்டத்திலேயே மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு உள்ளானார்கள்.

இந்தக் கஷ்ட நிலைமையைக் கண்டு கவலைக்குள்ளாகிய ஆசிரியர்கள் சிலர் சிந்தித்து செயற்பட்டதன் பிரதிபலனாக, தர்கா நகரில் உயர்தர விஞ்ஞான செயற்திட்டம் 2014ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இம்முயற்சியை அனுபவமிகு விஞ்ஞான ஆசிரியர்கள் மேற்கொண்டார்கள். இந்த செயற்திட்டத்துக்குத் தேவையான நிதி வசதிகளை அவ்வப்போது கல்வியில் சிரத்தையுள்ள பரோபகாரிகள் மேற்கொண்டு வந்தார்கள். பாடசாலை ஆசிரியர்களுடன் மேலதிக வகுப்புகளுக்காக  ரிஸ்வான், ஹிப்ராஸ் ஆகியோர் ரசாயனவியலுக்காகவும் நந்தகுமார், சந்திரபிரகாசம் ஆகியோர் பௌதீகவியலுக்காகவும் ஷகீல், மிஸ்கீன் ஆகியோர் உயிரியலுக்காகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மேற்படி செயற்திட்டத்தின் திருப்திகரமான செயற்பாட்டில் கவரப்பட்ட மாணவர்கள் பலர், இந்த செயற் திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்க விருப்பங் காட்டினார்கள். இதனால் மேலதிக நிதி வசதியும் அவசியமாகியது. இச் சந்தர்ப்பத்தில் செயற்திட்டம் தொடர்ந்து செயற்படத் தேவையான நிதி வசதியினை வழங்குவதற்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் பேரில் இயங்கும் டொக்டர் ராஜித மன்றம் முன்வந்தது.

இவ்வாண்டு தர்கா நகர் சாஹிரா கல்லூரியிலும் மற்றும் அளுத்கம முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் விஞ்ஞான உயர் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள். இங்கு சேரும் வெளிப்பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது.

டொக்டர் ராஜித அமைப்பு 2017ஆம், 2018 ஆம் பிரிவு மற்றும் மீட்டல் வகுப்புக்களையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2019ஆம் பிரிவு இம்மாதம் 4ஆம் திகதி முதல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புக்களில் சேர்ந்து கற்க விரும்பும் மாணவர்கள் 0773456016 (பொறுப்பாசிரியர் சப்வான்) என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, தர்கா நகர் உயர் தர விஞ்ஞான செயற்றிட்டம் வேண்டிக் கொள்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்