கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு
– அஹமட் –
மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தரப்பினரால் திட்டமிட்டு கதை பரப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சொந்த பிரதேசமான கண்டியிலேயே உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு கடந்த 09 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கான அந்தப் பதவியினை ராஜிநாமாச் செய்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மு.கா. தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான், திடீரென வெளிநாடு சென்று விட்டதாக செய்தியொன்று பரப்பப்பட்டது.
ஆயினும், சல்மான் வெளிநாடு செல்லவில்லை என்றும், அவர் கண்டியிலேயே உள்ளார் எனவும் தற்போது தெரிவிக்கப்படுகிறது.
சல்மான் வெளிநாடு சென்று விட்டதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தரப்பினர் திட்டமிட்டு, கதை பரப்பியதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ஹசனலிக்கு வழங்கும் பொருட்டு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்யுமாறு, சல்மானிடம் ஹக்கீம் கோரிய போதும், அதற்குப் பகரமாக தனக்கு ஒரு நல்ல பதவி வழங்க வேண்டுமென, சல்மான் கேட்டதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ளும் விருப்பத்துடன் சல்மான் உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.