மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம்

🕔 January 10, 2017

hasanalihakeem-086– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்து கொடுப்பார் எனக் கூறப்பட்ட எம்.எச்.எம். சல்மான், பதவியினை ராஜிநாமா செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார் எனும் தகவல், கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.

மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி, நேற்று 09 ஆம் திகதி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஹசனலிக்காக தனது பதவியினை ராஜிநாமா செய்வார் என்று கூறப்பட்ட, மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் வெளிநாடு சென்று விட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து – ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்காமல், மற்றுமொரு தடவை ஏமாற்றும் நாடகத்துக்கு ஹக்கீம் துணிந்து விட்டாரா என்கிற சந்தேகம், அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்கும் சல்மானிடம் – ஹக்கீம் ராஜிநாமா செய்யுமாறு கூறியபோதும், தனக்கு மாற்றுப் பதவியொன்றினை வழங்காத வரையில், ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று சல்மான் கூறியதாக கட்சிக்குள் பேசப்படுகிறது.

மு.காங்கிரசுக்குள் எழுந்த – செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு, சுமூகமானதொரு முடிவினை எட்டுவதற்காக, செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கவுள்ளதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த பொதுத் தேர்தலில் ஹசனலியை போட்டியிட வேண்டாமென்று – தான் கூறியதாகவும், அதற்குப் பகரமாக – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவேன் என்று வாக்குறுதி வழங்கியிருந்ததாகவும், குறித்த உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கு முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினர் முன்னிலையில் ஹசனலியுடன் ரஊப் ஹக்கீம் சமரசத்துக்கு வரும் பொருட்டு, டிசம்பர் 16 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மு.காவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் தனது பதவியினை ராஜிநாமாச் செய்யும் பொருட்டு எழுதிய கடிதமொன்றின் பிரதியினை, ஹசனலியிடம் ஹக்கீம் ஒப்படைந்திருந்தார் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் ஹசனலியை ஏமாற்றுவதற்கு ஹக்கீம் முயற்சிப்பாராயின், மு.கா.வின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஹசனலி தெரிவித்திருந்த முறைப்பாட்டுக்குரிய நடவடிக்கைகளை, மீளவும் மேற்கொள்ளுமாறு ஹசனலி தரப்பு கோர முடியும்.

மு.கா.வின் செயலாளர் பதவி குறித்து, தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் ஹசனலி தெரிவித்த முறைப்பாட்டினை, அவர் எழுத்து மூலம் மீளப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments