முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

🕔 January 5, 2017

basheer-097வில்பத்து வனப் பகுதியினை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகு, அதனால் பாதிக்கப்படவுள்ள முஸ்லிம்களின் புண்களுக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன புனுகு தடவுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் ஆறுதல் சொல்லத் தேவையில்லை என்றும், முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தட்டிக் கேட்டு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் தவிசாளர் பசீர் மேலும் கூறியுள்ளார்.

வில்பத்து விவகாரம் மற்றும் சிறுபான்மையினரின் பிரதேசங்களில் தொல்பொருட்கள் தோண்டியெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில் தவிசாளர் பசீர் மேலும் கூறுகையில்;

ராஜிதவின் புனுகு

“புராதன எச்சங்களின் லாவக விளையாட்டுகள் பற்றி, முன்பு நான் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். அவை ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. அதில், சிறுபான்மையினரின் ‘பொங்குதல்களை’ சாந்தப்படுத்துவதற்கு, சில அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தேன். அவர்களில் ராஜித சேனாரட்னவும் ஒருவர் எனவும் சுட்டியிருந்தேன்.

வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரி மிகத் தெளிவாக, வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உத்தரவிட்ட செய்திகள்ளூ ஈயம் காய்ச்சி ஊற்றப்படாத காதுகள் அனைத்துக்கும் கணீர் என்று கேட்டது. அதன் பின்பும், ஊடகங்களுக்கு பேசிய அமைச்சர் ராஜித; முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு தடவியதைக் காணவும், கேட்கவும் கிடைத்தது. முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்ல எந்த இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் தேவையில்லை. அவர்கள், அநீதியைத் தட்டிக் கேட்டு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதியின் உத்தரவு நிறைவேற்றப்படும் என்பதும், அந்த முஸ்லிம் குடும்பங்கள் இவ்வுத்தரவினால் தம் வாழ்வை இழக்கப் போவதும் உறுதி. வடக்கு முஸ்லிம்கள் வில்பத்துவில் அத்துமீறவில்லை என்கிற ராஜிதவின் ஊடக மொழிதல் எந்த விமோசனத்தையும் தரப்போவதில்லை. வேண்டுமானால் இவ்வாறான ஏமாற்றுக் கருத்துக்களை நம்பும் முகநூல் அப்பாவிகளுக்கு, ஒரு பதிவை இட்டுக் குதூகலிக்க உதவலாம்.

அபத்தங்கள்

இயற்கை எந்த பெரும்பான்மை இனத்துக்கும் மட்டும் உரித்தானதல்ல. அது பெரும்பான்மைப் பிரதிநிதியல்ல; பிரபஞ்சப் பிரதிநிதி. இயற்கை தமது நல்வாழ்வுக்காக செய்யும் அர்ப்பணங்களை மனிதர்கள் கணக்கில் எடுக்காமல் அதனை அழித்து, தற்காலிக இலாபத்தை குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் அநியாயம் உலகெங்கும் நடக்கிறது.

வில்பத்து வனப்பகுதியை அண்டி பல்லாண்டுகளாக அங்கு வாழ்ந்துவந்த முஸ்லிம்கள், மீள் குடியேறும் உரிமையை நிலை நாட்டியதைத் தவிர வேறெந்த இயற்கைக்கு விரோதமான செயல்களிலும் ஈடுபடவில்லை.

இலங்கையின் வனப் பாதுகாப்புத் திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும் மாத்திரமல்ல, வனமும் தொல்பொருள்களும்கூட இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். வனத்தில் உள்ள மரங்களில் சிங்கள மரங்கள் 78 வீதம், தமிழ் மரங்கள் 12 வீதம், முஸ்லிம் மரங்கள் 8 வீதம், ஏனைய மரங்கள் 2 வீதம் என நினைத்து ஒரு அரசாங்கமே செயல்படுவது பெரும் அபத்தமாகும். 100 வீதமும் சிங்கள மரங்கள் என புதிய அரசாங்கமும், நிறைவேற்று அதிகாரமும் நினைப்பது இதைவிடப் பெரிய அபத்தமாகும்.

வனங்களைப் பாதுகாப்பது அனைத்து இன மனிதர்களின் கடமையாகும். மரங்களை அழிப்பது கடுமையான குற்றமாகும். இக்குற்றத்தை அங்கு மீள்குடியேறிய முஸ்லிம்கள் செய்யவில்லை என்பதை, அந்த மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த அரச அதிபரே பகிரங்கமாக ஆதாரத்துடன் நிறுவியுள்ளார். இதன் பின்னும் அரசாங்கத்தின் அதிகார அறுவை வாள், அம்மக்கள் மீது பாய்வதற்கு, இனக்குரோதம் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

முஸ்லிம்கள் காடழிப்பவர்கள், அத்துமீறி அரச காணிகளைப் பிடிப்பவர்கள் எனப் பொய்க் குற்றம் சுமத்தி, முஸ்லிம்களின் சுதந்திர இருப்புக்கு குந்தகம் விளைவிக்க முயலும் பேரினவாதக் கும்பலுக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றன?

ஆணி அறைதல்

பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் தொடர்ந்தும் பீதியில் உறைந்திருக்கச் செய்தால்தான், குறியற்று – குறுக்கும் நெடுக்கும் தலை தெறிக்க ஓடும் அரசாங்கத்தை, அம்மக்கள் கண்டும் காணாமல் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிப்பார்கள் என்ற ஆளும் தந்திர ஆணியை அறைய, முஸ்லிம்களின் தலைதானா கிடைத்தது இவர்களுக்கு?

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்திருந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை மோதவிட்டு ஆட்சி செய்து வந்த காலம் 2009 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்து விட்டது. அத்தோடு சிங்கள மக்களின் அச்சமும் அற்றுப் போனது. தற்போது சாதாரண அம்பாவி சிங்கள, முஸ்லிம் இளைஞர்களை மோதவிட்டு ஆட்சியைத் தொடரும் திட்டத்தை, இல்லங்கையின் அனைத்து இனங்களையும் சேர்ந்த புதிய பரம்பரை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான மாற்றுத்திட்டத்தை முன்வைத்து ஐக்கியப்பட்டு இயங்க வேண்டும்.

புராதன சின்னங்கள் பௌத்த எச்சங்களாக மட்டுமல்ல; அவை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் நாகர் என பல தரப்பட்ட அடையாளங்களைக் கொண்ட தொல் பொருட்களை உள்ளடக்கியவை என்பதை அரசுக்கு உறைக்கச் சொல்வது யார்?

தொல் பொருட்கள் காணப்படும் இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை சிவில் பாதுகாப்புப் பிரிவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். இச்செய்தியைக் கேட்ட முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம், முஸ்லிம் இளைஞர்களும் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அது

ஆண் பூனை நடக்கும் போது பின் பக்கமிருந்து ‘அது’ ஆடுவது போல, ஆண் காகம் பறக்கும் போது காகத்தின் பின் பக்கமிருந்து ‘அது ‘ ஆடுவதில்லை. ஏனென்றால் காகத்துக்கு ‘அது’ இல்லை அமைச்சரே.

‘அது’ இருந்திருந்தால் ஆடியிருக்குமல்லவா?

இன்னும் உயிரோடு இருக்கும் முன்னாள் முஸ்லிம் கலாச்சார அமைச்சர்களே சொல்லுங்கள்” என்றார்.

Comments