ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

🕔 January 3, 2017

Hakeem+Hasanali - 006– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார்.

செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துள்ளதாகவும், இதன் பொருட்டு ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் சம்மதித்ததாகவும் ஹக்கீம் இதன்போது சொன்னார்.

மட்டுமன்றி, ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக, கடந்த பொதுத் தேர்தல் காலத்திலேயே, தான் உறுதி வழங்கியிருந்ததாகவும் மு.கா. தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஹசனலி விருப்பம் கொண்டிருந்தார். ஆயினும் ஹசனலியின் சொந்த ஊரான நிந்தவூரில், மு.கா. சார்பாக பைசால் காசிம் போட்டியிடவிருந்தார். எனவே, ஹசனலியிடம் தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று நான் கூறியதோடு, அவருக்கு தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாகவும் வாக்குறுதியளித்திருந்தேன்” என்று ரஊப் ஹக்கீம் விபரித்தார்.

இதற்கிணங்க, எதிர்வரும் 09 ஆம் திகதி மு.கா. பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாமா செய்யும் வெற்றிடத்துக்கே, ஹசனலி பதவியேற்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்