அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி
🕔 January 2, 2017
– யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் –
அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, மூன்று நாட்களைக் கொண்ட வதிவிட புத்தாக்கப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் பயிற்சி நெறிக்கு, ஐக்கிய அமெரிக்க தூதரகம் அனுசரணை வழங்கியது.
கடந்த 30ஆம் திகதி ஆரம்பமான மேற்படி பயிற்சிநெறியில், அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருக்கும் அனைத்து இன மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவ சங்க முன்னாள் செயலாளரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளருமான அஸ்லாம் சஜாவின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி நெறி, பல்துறை சார்ந்த விசேட வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
பயிற்சிநெறியின் இறுதி நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், சட்டம் – ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை ஸாஹிறா கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம். பதுர்த்தீன், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதியாக நௌஸாட் ஏ. ஜப்பார்ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் பயிற்சிநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.