மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம்

🕔 December 30, 2016

Haniffa Mathani - 0992– றிசாத் ஏ காதர் –

நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி முரண்பாடானது சுமூகமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம் என்று, அந்தக் கட்சியின்  பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நிலவி வந்த முரண்பாட்டினை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்ட விடயத்தினை ஹனீபா மதனி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரலாற்றுப் புகழ் மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையினை மனதிற் கொண்டு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்து, கடந்த ஜுலை மாதம் கட்சியின் தலைவர், தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு தான் எழுதியிருந்த கடிதம் குறித்தும் இந்த மடலில் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

ஹனீபா மதனி எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது இந்த நாட்டு முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்ற க, அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். இது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் கௌரவத்தையும் அளிக்கின்றது.

நமது இக் கட்சியின் பேராளர் மாநாடு கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கட்சிக்குள் உட்கட்சி முரண்பாடு தோன்றியது. இந்த நிலையில், 2016.12.14ஆம் திகதி கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் உச்சபீடக் கூட்டம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தேசியத் தலைவர், செயலாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் நேரடியாக பிரத்தியேகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிற்பாடு 2016.12.16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தலைவர், செயலாளர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் நடத்திய கலந்துரையாடலுடன் முரண்பாடுகள் முடிவுக்கு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது.

பொதுவாக அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மத்தியில் முரண்பாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படுவது சகஜமே. ஆனால் அப்பிரச்சினைகளை வளரவிடாது அவ்வப்போதே விட்டுக்கொடுப்புகளைச் செய்து தீர்த்துக்கொள்வதே, சிறந்த வழிமுறையாகும். இதுவே இஸ்லாமிய நடைமுறையுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் முரண்பாடுகளின் போது முஸ்லிம்களுடன் மாத்திரமல்லாது, குறைஷிக் காபிர்களுடன் கூட விட்டுக்கொடுப்புகளைச் செய்து வெற்றிபெற்று நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். அந்த இஸ்லாமிய வரலாற்று பின்னணியை நாங்கள் க் கொண்டவர்கள். அதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.

‘வரலாற்றுப் புகழ்மிக்க ஹூதைபிய்யா உடன்படிக்கை: நமது முரண்பாடுகளை முடிவுறுத்த உதவுமாக’ எனும் தலைப்பிட்டு 2016.07.11ம் திகதி என்னால் மு.கா. தலைவர், தவிசாளர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு முகவரியிட்டு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதியிட்டு கடிதமொன்று அனுப்பி வைக்க்பபட்டது. அம்மடலை மீண்டும் ஒரு முறை தங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் அன்புடன் ஞாபகப்படுத்திப் கொள்கின்றேன்.

நமது கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாட்டு நிலைக்கு சற்றுக் காலம் தாழ்த்தியேனும் முடிவு எட்டப்பட்டிருப்பதை நினைத்து, நாம் அனைவரும் மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது.

சிறப்பான, இம்முடிவு எட்டப்படுவதற்கு அர்ப்பணிப்புடன் பல நல்ல உள்ளங்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றன. குறிப்பாக இதற்கு வியூகம் அமைத்துக் கருமமாற்றிய தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம், இக்காத்திரமான முடிவைச் சாத்தியப்படுத்தும் வகையில் இசைவாக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி மற்றும் கட்சியின் தவிசாளர் சேகுதாவூத் பஷீர் ஆகியோர் எமது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்களாவர்.

மேற்குறித்த, தீர்மானத்தினூடாக கட்சியும் சமூகமும் பாதுகாக்கப்பட, மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனை உணர முடிகின்றது. தற்போது நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், நமது கட்சி இவ்வாறு சுமூகமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பதனை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

கட்சியின் தலைமைகள் தமக்கு மத்தியில், இவ்வாறான நல்லதோர் முடிவுக்கு வருவதற்கு நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களில் பெரும் பங்காற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி அச்சி முஹம்மது இஸ்ஹாக், கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் இது தொடர்பாக தேசியத் தலைவரினால் நியமிக்கப்பட்ட உச்ச பீடத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், மேலும் இச்சமரசத்தின் வெற்றிக்கு உந்து சக்தியாகவிருந்த உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பெரிதும் நன்றிக்குரியவர்களே.

கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைக்கு தற்போது காணப்பட்டுள்ள உடன்பாடு நீடித்து நிலைக்கவும், இப்பணி எமது சிரசுகளில் பாரப்படுத்தப்பட்டுள்ள அமானிதம் என்பதனை உணர்ந்து ஒழுகுவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்குத் துணைபுரிவானாக.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்