மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார்

🕔 December 30, 2016

slmc-logo-011ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.காங்கிரசின் அதிகாரம் மிக்க செயலாளர் பதவி தொடர்பில் மு.கா. தலைவருக்கும், ஹசனலிக்கும் இடையில் பாரிய முரண்பாடு நிலவி வந்த காலப் பகுதியில், கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் கலந்து கொள்வதை ஹசனலி தவிர்த்து வந்திருந்தார்.

இந்த நிலையில், தவிசாளர் பசீர் சேகுதாவூத் எதிர்வரும் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பது குறித்து அறிய முடியவில்லை. மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதில் மிகவும் தீவிரமாக தவிசாளர் பசீர் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதை, கட்சித் தலைவர் அறிவிக்கும் உயர்பீடக் கூட்டத்தில், தவிசாளர் பசீர் கலந்து கொள்வார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மு.கா.வின் அடுத்த பேராளர் மாநாடு தொடர்பிலும், 02ஆம் திகதி இடம்பெறும் உயர்பீடக் கூட்டத்தில் பேசப்படவுள்ளதாக, கூட்ட நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்