சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம்

🕔 December 16, 2016

Hakeem+Hasanali - 006– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தின் பிரதியொன்றினை, செயலாளர் நாயகம் ஹசனலியிடம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில், மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலியை, ரஊப் ஹக்கீம் சந்தித்தபோதே, மேற்படி கடிதத்தின் பிரதியினைக் கையளித்துள்ளார்.

இந்த நிலையில், மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசனலியின் பதவிக்குரிய அதிகாரங்களை பறித்தெடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இறுதியில், ஹசனலியிடம் மண்டியிட நேர்ந்துள்ளமையானது, தர்மம் தோற்று விடாது என்பதற்கான மற்றுமொரு சான்றாதாரமாகும் என, மு.காங்கிரசின் மூத்த உயர்பீட உறுப்பினர் ஒருவர் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

ஹசனலியை நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்த மு.கா. தலைவர் ஹக்கீம், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒரு மாதத்துக்குள் சகல அதிகாரமும் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார்.

ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காகவே, சல்மான் ராஜிநாமாச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தினுடைய பிரதியொன்றினை செயலாளர் நாயகம் ஹசனலியிடம், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை காலை கையளித்ததாக தெரியவருகிறது.

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சையினை தீர்த்துக் கொள்வதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் சந்தித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே, சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தின் பிரதியினை, ஹசனலியிடம் ஹக்கீம் வழங்கியுள்ளார்.

ஹசனலியை அதிகாரமற்ற ஒருவராக கட்சிக்குள் ஆக்கி விட வேண்டும் என்று நினைத்து, சூழ்ச்சிகரமாகச் செயற்பட்ட ரஊப் ஹக்கீம், இறுதியாக ஹசனலிடம் சரணடையும் நிலை உருவாகியுள்ளதாக மு.கா.வின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் – தர்மமே இறுதியில் வெல்லும்” என்பது, ஹசனலி விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது என்று, மு.கா.வின் மூத்த உயர்பீட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்