பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

🕔 December 1, 2016

பரொருவரை கைது செய்ய வேண்டாம் என்று, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக பணிப்புரை விடுத்தமையானது தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்

இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பினூடாக அவருக்கு, அந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பானது.

“அந்த வீடியோ காட்சியை நானும் பார்த்தேன்.  அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்துக்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார்.

“பொலிஸ்மா அதிபர் பேசும் வீடியோவை  நானும் பார்த்தேன். அந்த செயற்பாடு மிகவும் தவறானது. இது தொடர்பில் அவரை அழைத்து விளக்கம் கோர இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்று காலை நடைபெற்ற கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் உரைநிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவருக்கு  தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்போது பொலிஸ் மா அதிபர், “நிச்சயமாக அவரை கைது செய்ய மாட்டேன். பொலிஸ் நிதி மோசடி பிரிவில் விசாரித்தேன். எனது அனுமதியின்றி அவரை கைது செய்ய விடமாட்டேன்’ என கூறுகின்றார்.

இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவே, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியில் பணிப்புரை விடுத்தார் என்று, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாக்க இன்று சபையில் தெரிிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி உரையாடல் வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்