நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

🕔 November 23, 2016

– அஷ்ரப் ஏ சமத் –

தங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று புதன்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்ட விடயத்தினை அவர் கூறினார்.

மேற்படி சந்திப்பில் முஸ்லிகளின் தரப்பில் முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை ஜம்மியத்துல உலமா சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆசாத் சாலியும் கலந்து கொண்டார்கள்.

அமைச்சர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

“பொதுபலசேனா அமைப்பினர் மற்றும் கடும்போக்குடைய பிக்குமார்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசினேன். அதே போன்று இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரநிதிகளைச் சந்தித்தேன்.

மதங்களுக்கிடையில்  வெறுப்பினை ஏற்படுத்தும் வையில் பேச்சுக்கள், ஊர்வலங்கள் நடத்துதல், சந்திகளில் கூடி பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு. சகல மதங்களைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் உரிமைகள் உள்ளன. மதங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைளை அந்தந்த மதப் பெரியார்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, இரண்டு சாராரும் சமரசம் செய்துகொள்ள முடியும்.

மேற்சொன்ன குற்றத்தினைப் புரிகின்றவர்களுக்கு எதிராக, இந்த நாட்டின் குற்றவியல் சட்டக் கோவையில் உள்ள பிரிவின்படி, நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது அமைச்சரவையில் உள்ள நான்கு மத விவகார அமைச்சா்கள் உள்ளனா். அவா்களுடனான சந்திப்பும் நாடாளுமன்றத்தில் நடைபெறும்.  இந்த அரசாங்கம், சகல இன மதங்களின் நல்லிணத்தையும் பாதுகாக்கும்” என்றார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா சபையின் ஊடகச் செயலளாா் மௌலவி பாசில் பாறூக் கருத்து தெரிவிக்கையில்;

“இஸ்லாம் – அந்நிய மதங்களை கௌரவித்து நடந்து கொள்ளும் ஒரு சமயமாகும். முஸ்லிம்களுக்கு உணவு, உடை மற்றும் கலாச்சாரம் என ஒரு சீரிய முறை உள்ளது. ஜிகாத், ஹலால் உணவு மற்றும் பர்தா போன்றவை தொடர்பில் விளக்கும் சிங்கள மொழி மூலமான நுால்களின் ஒரு தொகுதியினை அமைச்சாிடம் கையளித்தோம்” என்றார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்