சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம்

🕔 November 19, 2016

nuraicholai-022– முன்ஸிப் அஹமட் –

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை புனர் நிர்மாணம் செய்து தருவதற்கு சஊதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சஊதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அலி அல் உம்றி, நேற்று வெள்ளிக்கிழமை நுரைச்சோலை வீடுகளைப் பார்வையிட்டபோது இந்த உறுதி மொழியினை வழங்கினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், சஊதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம். மாஹிர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, அலி அல் உம்றியின் இந்த விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நுரைச்சோலையில், சஊதி அரேபியாவின் நிதியில், 500 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டுத் திட்டம், நிர்மாணிக்கப்பட்டு 07 வருடங்கள் நிறைவடைந்தும், அவை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், இங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, வீடுகளைச் சுற்றி காடு வளர்ந்து காணப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு பிரித்து வழங்குமாறு அரசாங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

எனவே, அந்த வீடுகளின் தற்போதைய நிலைவரம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே, சஊதி அரேபியாவின் இலங்கைக்கான தூதரக அதிகாரி நேற்று நுரைச்சோலைக்கு வருகை தந்திருந்தார்.

சஊதி அரேபிய தூதரக அதிகாரியின் மேற்படி விஜயத்தின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் உட்பல பலர் சமூகமளித்திருந்தனர்.nuraicholai-0897 nuraicholai-044 nuraicholai-033

Comments

புதிது பேஸ்புக் பக்கம்