டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு

இந்தக் கைது தொடர்பில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
தவ்ஹித் ஜமாத்தினர் கடந்த 03ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தீ வைத்து எரித்தும் கொல்வேன் என்று மேற்படி டான் பிரியசாத் கூறியிருந்தமையினை, தவ்ஹித் ஜமாத்தினர் தமது ஊடக அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாகவும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார் என, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
டான் பிரசாத்தை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் டான் பிரியசாத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் ஆஜராகவுள்ளதாவும் தவ்ஹித் ஜமாத் தெரிவித்துள்ளது.
தவ்ஹீத் ஜமாத் செய்த முறைப்பாட்டின்போது, டான் பிரியசாத்தின் இனவாதப் பேச்சு மற்றும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வீடியோ பதிவுகள் அடங்கிய CD க்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.