சிலாவத்துறை மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, கடற்றொழில் அமைச்சர் தலைமையில் சந்திப்பு
🕔 November 11, 2016


தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வள அமைச்சுக் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதில், பிரதி அமைச்ச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். காதர் மஸ்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முசலிப் பிரதேச மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது முசலி மீனவர்களின் பிரச்சினைகளை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கியுள்ள அனுமதியால் – தமது தொழிலுக்கு ஏற்படும் இடைஞ்சல்களையும் அங்கு வருகை தந்திருந்த மீனவப் பிரதிநிதிகள் விளக்கினர்.
கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் அமரவீர, இந்தப் பிரச்சினை இரண்டு சமூக மீனவர்களுக்கு இடையே எழுந்துள்ளதால், இதனை மிகவும் கவனாமாக கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், இதன் மூலம் பல்வேறு சக்திகள் தமது தீய நோக்கை அடைவதற்கு வழி விடக்கூடாதெனத் தெரிவித்து, முசலி மீனவர்களின் பிரச்சினையை பரஸ்பர கலந்துரையாடல்களின் பின்னர் தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார்.
இதன்போது, நீர்கொழும்பில் உள்ள மீனவர் சங்கத் தலைவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், இந்த விடயங்களைக் கூறியதுடன், அந்த மீனவச் சங்கப் பிரதிநிதிகளையும், முசலி மீனவச் சங்கப் பிரதிநிதிகளையும், இதில் அக்கறை கொண்ட மக்கள் பிரதிநிதிகளையும் எதிர்வரும் புதன்கிழமை 16ஆம் திகதி கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, அமைச்சர் றிசாத் பதியுதீன், மஹிந்த அமரவீரவுடன் நேற்று வியாழக்கிழமை, முசலி மீனவர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

