ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு

🕔 November 9, 2016

Subair - MPC - 01– எம்.ஜே.எம். சஜீத் –

றாவூர் பற்று பிரதேச செயலகம் 26 வருடங்கள் காணி நிருவாகத்தினை வகித்து வருகின்ற போதும், இதுவரை ஒரு துண்டுக்காணியைக்கூட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் குற்றம் சுமத்தினார்.

ஏறாவூர் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்குட்பட்ட மிச்நகர், மீராகேணி, ஐயங்கேணி ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளின் காணிகள், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நிருவாகிக்கப்பட்டுவருகிறது. இதனால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நிருவாக ரீதியாக பல பிரச்சிணைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

குறிப்பாக மேற்படி கிராமங்களில் வாழும் மக்களது இனப்பரம்பலுக்கேற்ப, அரச காணிகள் பங்கீடு செய்கின்ற போது, ஒரு துண்டுக் காணியேனும் அப்பிரதேச மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

1990ஆம் ஆண்டு இம்மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்குமான காணி விடயங்கள், ஏறாவூர் பற்று பிரதேசசெயலகத்திடம் கையளிக்கப்பட்டது. இருந்தும் அங்கு 2.8 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் நான்காயிரம் குடும்பங்களும், சுமார் பதினோராயிரம் தனிநபர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள், சனநெருக்கத்தினால் சுகாதார ரீதியாக பல பிரச்சிணைகளை எதிர்நோக்கி வருவதுடன், சுத்தமான குடிநீர் பிரச்சிணைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, மேற்குறித்த பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் கல்வி, சுகாதார, மற்றும் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு, காணியின்மையே பெரும் பிரச்சினையாகவுள்ளது.

நான் அண்மையில் பிரதேச செயலாளரிடம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினூடாக, ஒரு விளையாட்டுமைதானத்தை அப்பிரதேசத்தில் அமைப்பதற்கு கதைத்த போது, அவர் என்னிடம்  சம்மதம் தெரிவித்தார்.

அந்த அடிப்படையிலே அப்பிரதேச மக்களின் நலன் கருதி கல்வி, சுகாதார மற்றும் விளையாட்டு போன்றஅபிவிருத்திகளுக்கு அங்குள்ள அரச காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இப்பிரதேச அபிவிருத்திக்குழு முயற்சிக்கவேண்டும்.

தற்போது அப்பிரதேசத்திலுள்ள சுமார் நானூறு, ஐந்நூறு ஏக்கர் காணிகள் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த நபருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தக்காணிகளில் எந்தவிதமான பயிர்ச் செய்கையோ, திட்டங்களோ மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க முடியாமலுள்ளபோது, அங்கு பெருமளவிலான காணிகள் நீண்ட நாள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் கவலையான விடயமாகும்.

மிச்நகர், மீராகேணி, ஐயங்கேணி ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்கள் தங்களது அரசம மற்றும்பொதுத் தேவைகளுக்காக காணிகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.  எனவே இது விடயமாகக் கவனத்திற்கொண்டு எதிர்காலத்தில் அம்மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில், அரச காணிகள்பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்