அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி

🕔 November 4, 2016

protest-akp-022(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்)

க்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம், அக்கரைப்பற்றின் நிலவளத்தினை வீணாடிப்பதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றம்சாட்டினர்.

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், அக்கரைப்பற்றிலுள்ள ஒரு அரசியல்வாதியுடன் இணைந்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பேரணியில் கலந்துகொண்டோர் கூறினர்.

அந்த வகையில், இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமுக்கு எதிராகவும், சுலோக அட்டைகள் ஏந்தப்பட்டிருந்தன.

‘பைசலே, எமது நிலத்தை நீ சூரையாடியது போதாதா’, ‘பெறுமதிமிகு நிலத்தை வீணடிக்காதே’, ‘எமதூரின் வளங்களை நாசகாரர்களிடமிருந்து காப்போம்’, ‘முறையான திட்டமிடலை கபளீகரம் செய்யாதே’ என்பன உள்ளிட்ட பல சுலோக அட்டைகளை, கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.

அக்கரைப்பற்று மாநகரத்துக்கென்று முழுமையான திட்டமிடலுடன் மாநகரப் பூங்கா, தீயணைப்புப் பிரிவு, நூதனசாலை, அக்கரைப்பற்று மைதானத்துக்கு செல்லும் சுற்றுவட்டம், பூங்காவினுடைய முகப்பு என்று, முறையான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அதனைச் சீர்குலைக்கும் வகையில், சில அரசியல்வாதிகள் அபிவிருத்தி எனும் பெயரில் முயற்சித்து வருவதாகவும் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டோர் சுட்டிக்காட்டினர்.

கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்;

‘அக்கரைப்பறில் ஏராளமான அபிவிருத்திகளை திட்டமிடலோடும், அழகியலோடும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நூதனசாலை, பூங்காவினுடைய முகப்பு, மைதானத்துக்குச் செல்லும் சுற்றுவட்டம் ஆகியவற்றுக்கான வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னர் அதாஉல்லாவிடமிருந்து அதிகாரம் கைநழுவிப்போனது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரதியமைச்சர் பைசால் காசிம் அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை திட்டமிட்டு சீர்குலைக்கின்றார்.

அக்கரைப்பற்றின் மிகமுக்கியமான பெறுமதி வாய்ந்த நிலத்தை சூறையாடி, எது எங்கு வரவேண்டுமோ – அதை அங்கு அமைக்காமல், அக்கரைப்பற்றின் அழகை, அதன் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் பைசால் காசிம் ஈடுபட்டிருக்கிறார்.

பல கோடி ரூபாய் பெருமதியான ஒரு காணியில், சில மில்லியன் பெறுமதியான சமூகசேவைக் கட்டிடத்தை கட்டுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர், அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான மேற்படி பேரணியானது, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

அங்கு, கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் சார்பில், அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் அதாஉல்லா சக்கி, பிரதேச செயளாலரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்தார்.protest-akp-011 protest-akp-033 protest-akp-044

Comments

புதிது பேஸ்புக் பக்கம்