உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

🕔 October 27, 2016

thandayutahpaani-098– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்கு பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கின்றார் என, அந்த மாகாணசபையின் கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி குற்றம்சாட்டினார்.

கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, கல்வியமைச்சர் இந்தக் குற்றச்சாட்டி முன்வைத்தார்.

இது தொடர்பில் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி மேலும் தெரிவிக்கையில்;

“கல்விக் கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்கள் வந்தால் – அவர்களை பொருத்தமாவும், உரிய இடத்துக்கும் ஒதுக்கீடு செய்வது கல்வியமைச்சுக்குரிய பணியாகும். கல்வியமைச்சு அதைச் செய்கிறது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களில் அதிகமானோர், பிற மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்பதனால், அவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சுடன் பேசிக் கதைத்து, அவ்வாறு வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்டவர்களில் அதிகமானோரை கிழக்கு மாகாணத்துக்குள் கொண்டு வந்து விட்டோம். அவ்வாறு கிழக்கு மாகாணத்துக்குக் கொண்டு வந்த ஆசிரியர்களை கல்வியமைச்சு நியாயமாகப் பங்கீடு செய்கிறது.

இது இப்படியிருக்க, அந்த ஆசிரியர்களை கல்வியமைச்சுக்கு அழைத்துக் கொண்டுவந்து நிறுத்தி விட்டு, எங்களை அவர்களுடன் பேசச் சொல்கிறீர்கள். இந்தக் குழப்பங்களை தயவு செய்து செய்யக் கூடாது. இது தொடர்பில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் எதுவும் தேவையில்லை. ஆசிரியர்களுக்குரிய சரியான ஒதுக்கீடு இங்கு நடைபெறும்.

ஆனால், நீங்கள் பிழையான வழிகாட்டலை கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்குக் கொடுக்கப் பார்க்கிறீர்கள்” என்றார்.

கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, கிழக்கு மாகாண சபையை ஒத்தி வைக்க வேண்டும் என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் கூறியபோதே, கல்வியமைச்சர் தண்டாயுதபாணி மேற்கண்ட குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்