புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

🕔 October 25, 2016

hakeembaisbasheer-0222ண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவருடைய பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – தேசிய அமைப்பாளராகவும், பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, நமது கட்சி வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு வேளை, அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறிச் சென்றது. அவ்வேளை, கட்சியுடன் சேர்ந்து வராமையால் விலகியவர்.

ஆனாலும்,  வாக்கெடுப்பு அன்று அதிகாலை வேளை, கொழும்பில் பாயிஸின் வீட்டுக்குச் சென்ற தலைவர் றவூப் ஹக்கீம், “அரசுடன் இருக்க வேண்டாம் எங்களுடன் வந்துவிடுங்கள்” என்று கேட்டார். அப்போது, தலைவரை கண்ணியமாக நடத்திய பாயிஸ், தனது சிறு வயது மகளை தலைவரின் மடியில் உட்கார வைத்து அழகு பார்த்தது மட்டுமல்லாமல், தனது சங்கடமான – இக்கட்டான நிலைமையை தலைவருக்கு புரியவைத்து அனுப்பினார்.

இப்போது எந்தவித நிபந்தனையுமற்று இணைந்து கொண்டுள்ளார்.

ஆனால், கட்சியை விட்டுச் சென்ற பலர் – கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர், பிரதித்தலைவர், தேர்தலில் வேட்பாளர், மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை நிபந்தனையாக வைத்து மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டமையினை, பாயிஸின் இணைவோடு – இந்த இடத்தில் ஒப்பு நோக்கிப் பார்க்கிறேன்.

இது மட்டுமல்லாது, மீளிணைந்தவர்கள் பலர் – கட்சிக்குச் செய்த பாரிய துரோகங்களையும், பாயிஸ் விலகிய தருணத்தோடு ஒப்பு நோக்குகிறேன்.

மேலும், பாயிஸ் நீண்ட நெடுங்காலம் கட்சியில் தொடர் அங்கத்துவம் வகித்தமையையும், அக்காலத்துக்குள் அவர் செய்த பாரிய பங்களிப்புகளையும் நட்புடன் எண்ணிப் பார்க்கிறேன்.

இப்பங்களிப்புகளில் இன்றைய தலைவருக்கு பாயிஸ் வழங்கிய இரண்டு உச்ச நிலை பங்களிப்பை கூற விளைகிறேன்.

ஹக்கீம் நோர்வேயில் இருந்த போது, அதாஉல்லாஹ் பெரும்பான்மை உச்சபீட உறுப்பினர்களின் ஆதரவுடன் முஸ்லிம் காங்கிரசை கைப்பற்ற உச்சபீடக் கூட்டத்தைக் கூட்ட முயன்றார். அவ்வேளை, தன் உயிரையும் துச்சமென மதித்து தாறுஸ்ஸலாமுக்குள் அதாவை உள் நுழைய விடாமல் தடுத்து, ஹக்கீமின் தலையைக் காப்பாற்றியதில் பாயிஸின் பங்களிப்பு மிகப்பெரியது.

இதுமட்டுமல்ல, றவூப் ஹக்கீம் அவர்கள் தனிப்பட்ட வகையில் ஒரு விடயத்தில் தப்பமுடியாத படிக்கு அகப்பட்டுக் கொண்டார். அதிலிருந்து அவரின் தலையைக் காக்க பலரும் பலவாறான செயற்பாடுகளில் இறங்கியிருந்தனர். அக்காலத்தில், கட்சியின் நலனில் அக்கறை கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெண், அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில், றாகம தேவாலயத்தில் இருந்த ‘லொக்கு சீயா’ என்ற ‘நியாஸ் தெய்யோ’விடம் சென்று பரிகார செயலில் ஈடுபட்டால், அகப்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து விடுபட முடியும் என்ற ஆலோசனையை ஹக்கீமுக்கு வழங்கினார்.

என்ன இழவு செய்தாவது இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதன் மூலம், கட்சித் தலைமைப் பதவியை தக்கவைத்தே ஆகவேண்டும் என்ற சூழலில் இருந்த தலைவர் தெய்யோவிடம் சென்றார். அப்போது, கூடச்சென்றவர்களில் நண்பர் பாயிசும் ஒருவர். இச்செயல் ஒரு ‘சிர்க்’ எனப் புரிந்து கொண்டாரோ இல்லையோ, ஹக்கீமுடன் செல்ல அவர் எடுத்த முடிவு, அன்று தலைவருக்காக நரகம் செல்லவும் அவர் தயாராக இருந்தமையை நிரூபிக்கிறது.

எனவே பாயிஸ் என்ன பிழை செய்திருந்தாலும், தலைவர் மன்னித்தே ஆகவேண்டும் என்ற நிலையை காலம் நிரூபித்திருத்திருக்கிறது.

குறிப்பு:

றாகம தேவாலய ‘லொக்கு சீயா’ எனும் ‘நியாஸ் தெய்யோ’ தற்போது உயிரோடு இல்லை. அவருடைய உடல் அக்கரைப்பற்று கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்க கண்டு மீட்கப்பட்டது.

மு.காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின்
பேஸ்புக் பக்கத்திலிருந்து.

Comments