யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை
🕔 October 24, 2016



– பாறுக் ஷிஹான் –
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து, குறித்த நடவடிக்கையினை அமைதியான முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்படி கவனஈர்ப்பு நடவடிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் கலந்து கொள்ளாத போதிலும், முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comments

