Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கிய மேற்படி திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ. குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.
இதன்படி குறித்த திரைப்படத்துக்கு இன்று வரை நீடிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை விலக்கிக்கொள்வதாக, நீதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இரு பெண்கள் நீதிபதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தநிலையில், குறித்த திரைப்படத்தின் மூலம், தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இயக்குநர் கூற முற்பட்டுள்ளதாகவும், இந்த திரைப்படம் வௌியானால் தனக்கு மட்டுமல்ல இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கே அபகீர்த்தி ஏற்படும் எனவும் கூறி, முன்னாள் நீதியரசர் லெனின் ரத்நாயக்க, மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த 05ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்ட திரைப்படத்தை வௌியிடுவதற்கு, இம்மாதம் 19ம் திகதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், அந்த தடையை இன்று 21 வரை மீண்டும் நீடிப்பதாக நீதிமன்றம் நேற்று 20ஆம் திகதி அறிவித்தது.
இதனையடுத்து இன்றைய வழக்கு விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி, சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற திரைப்படத்தை வௌியிட, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.