ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

🕔 October 16, 2016

President - 008ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை தான் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது தற்போதைய நிலையில் நெருக்கடியாக மாறியுள்ள தனது உரை தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

ஜனாதிபதி இங்கு பேசுகையில்; “எனது உரையை யாரும் சரியாக கேட்கவில்லை. கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் நான் கூறவில்லை. நான் அப்படி கூறும் அளவிற்கு முட்டாள் இல்லை. ராணுவ தளபதிகள் மூவரை நீதிமன்றத்துக்கு அழைத்து அந்த புகைப்படங்களை ஊடகங்களில் பிரசுரித்து, ராஜபக்ஷகளுக்கு  நன்மையை பெற்றுக் கொள்கின்றமை குறித்தே கூறினேன். ராணுவத்தினர் பிணை பெற்று விடுதலையாகியதும், ராணுவத்தினரை அரசாங்கம் பழி வாங்குவதாக கூறுவதன் ஊடாக, தங்களுக்கு சாதகமாக ஒரு சூழலை ராஜபக்ஷக்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள். நான் அதனையே கூறினேன்.

கோட்டபாயவின் பெயரை நான் கூறவில்லை. எனது உரையின் இறுதி பகுதியை யாரும் சரியாக கேட்கவில்லை. இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென நான் கூறினேன். இது வலுவான அரசாங்கம் என கூறினேன்.

ராஜபக்சர்களை பாதுகாக்கப்போவதில்லை. ராஜபக்ஷளுக்கு எதிரான விசாரணைகளை நான் ஒரு போது நிறுத்தப்போவதில்லை” என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஆற்றிய உரையொன்றில் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் கபீர் ஹாசீம்,  அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம், ரவிந்திர சமரவீர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்