கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்
– ரொபட் அன்டனி –
பக்குவமாகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் வடக்கிலும், தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்து விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலை பேணி செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கடந்த கால அனுபவங்களுடன் பார்க்கையில் தற்போது உருவெடுத்துள்ள இனவாதம் எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளும் பொங்குதமிழை நடத்தியே அவர்களுக்கிருந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டனர். சில விடயங்களில் அவ்வப்போது விட்ட தவறுகள் எங்களுக்கு படிப்பினையாக உள்ளன என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சரை சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
“இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் ‘எழுக தமிழ்’ என்றும் கிழக்கில் ‘கிழக்கின் எழுச்சி’ என்றும் தெற்கில் ‘சிங்ஹலே’ என்றும் விதவிதமான இனவாத தீவிரசக்திகள் தலைதூக்க தொடங்கியிருக்கின்றன.
இவர்கள் வெவ்வேறு துருவங்களாக செயற்படுவதாக தென்பட்டாலும், ஒருவருக்கொருவர் உதவுகின்ற பாணியிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் எல்லோரும் எதிரியின் நண்பர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவதைப் நாங்கள் காண்கின்றோம். குறிப்பாக மிகவும் பக்குவமாகவும் சாணக்கியமாகவும் கையாளப்படவேண்டிய விடயங்களை பகிரங்கமாக போட்டுடைத்து குழப்பிவிடுகின்ற நிலவரங்களை ஏற்படுத்தக் கூடாது. மிகவும் கவனமாக இந்த விடயங்களை நாங்கள் கையாளவேண்டியுள்ளது”.
கேள்வி: அதாவது எழுக தமிழ் போன்ற பேரணிகள் நல்லிணக்கத்திலும் தீர்வைக் காண்பதிலும் முட்டுக்கட்டையாக இருக்குமென கூறுவதற்கு முற்படுகிறீர்களா?
பதில்: எழுக தமிழ் நிகழ்வு நாட்டில் முழுமையாக சமஷ்டி ஆட்சி வேண்டும், நல்லிணக்க தாமதம் கூடாது, பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இது தெற்கிலிருக்கின்ற இனவாதிகளுக்கு தீணிபோடும் செயற்பாடுகளாகவே அமைந்திருக்கின்றது. தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு தீணிபோடும் வகையில் ஒரு சில செயற்பாடுகளை தூக்கிப் பிடிக்கின்றார்கள். ஆனால் இந்த இரண்டு துருவப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளுக்குமிடையில் ஒரு மிதவாத நிலைப்பாட்டுக்கு நாங்கள் எல்லோரும் வரமுடியும். அதற்கான அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அவற்றையெல்லாம் குழப்பியடிக்கும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி அமைந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். சரியான விடயங்கள் சரியான நேரத்தில் செய்யப்படவேண்டும். பிழையான தருணத்தில் சரியான விடயத்தை செய்வதும், பிழையான விடயமாக போய்விடும்.
இந்த விடயத்தில் நாங்கம் மிகவும் சாணக்கியமாகவும் பக்குவமாகவும் செயற்பட்டு விடயங்களை கையாளவேண்டும். வெண்ணை திரண்டு வருகின்ற போது தாழியை உடைகின்ற வேலையை இந்தப் பேரணிகள் செய்துவிடக்கூடாது. இவை எல்லாவற்றுக்கும் பின்னால் உட்கட்சி முரண்பாடுகள் காணப்படுகின்றன. மறுபுறம் சில வெளிநாட்டு சக்திகளின் தலையீடும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகின்றது.
எனவே இவற்றை எல்லாம் நாங்கள் மிகவும் நிதானமாக கையாளவேண்டும். பக்குவமாக அணுகவேண்டும். இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைவரங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. அது தொடர்ந்தும் தொடர்கதையாக இருக்க முடியாது.
என்னுடைய பாராளுமன்ற வாழ்வின் 22 வருடங்களில் ஆரம்பத்திலிருந்தே அதாவது என்னுடைய தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்தே சர்வகட்சி மாநாடுகளிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களிலும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டு வந்திருக்கின்றேன். இதில் எனக்கு கிடைத்துள்ள பட்டறிவானது கைக்கெட்டியது, வாய்க்கெட்டாமல் போய்விடும் நிலைமை உருவாகாமல் இருக்க விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறது.
ஆனால் நிலைப்பாடுகளை எப்போதும் ஒரு தரப்பே விட்டுக்கொடுக்கவேண்டும் என்றும் நெகிழ்வுத் தன்மையுடன் நடக்கவேண்டும் என்றும் கூறவில்லை. யுத்தத்தின் பின்னரான இந்த சூழலிலும் நல்லிணக்கத்திற்கு சர்வதேசம் சிறந்த சமிஞ்சையை காட்டிக்கொண்டிருக்கின்ற பின்னணியிலும் அவற்றைப் பயன்படுத்தி ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளினதும் தலைவர்கள் தேசிய அரசாங்கம் ஊடாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களை அதிகளவில் பக்குவப்பட்ட மற்றும் நெகிழ்வுத்தன்மையுடைய நோக்கில் ஆராய்கின்ற தலைமைகளாக இருக்கின்றமை எங்களுக்கிருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பாகும். அதனை நாங்கள் தவறவிட்டுவிடக்கூடாது.
கேள்வி: தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான உறவு எவ்வாறு உள்ளது?
பதில்: தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான எமது உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்புடன் பேசிக்கொண்டு வருகின்றோம். எமது இரண்டு தரப்புக்களுக்கிடையில் அதிகளவான புரிந்துணர்வு காணப்படுகின்றது. ஒரு சில விடயங்களில் இன்னும் இணக்கப்பாடுகள் எட்டப்படவேண்டியுள்ளது. அவற்றை நாங்கள் தாமதிக்காமலும் அதேநேரம் அவசரப்படாமலும் செய்யவேண்டியுள்ளது.
காரணம் சில தரப்புக்கள் வேண்டுமென்றே சில விடயங்களை போட்டுடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் நல்ல புரிந்துணர்வோடு கையாள முடியுமென்றும் நம்பிக்கை இருக்கின்றது. அதேவேளை தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சிறிய கட்சிகளுடன் குறிப்பாக மலையக மற்றும் சிறுகட்சிகளுடன் மேலும் பல இணக்கப்பாடுகள் எட்டப்படவேண்டியுள்ளது. அது தொடர்பாக இந்த பிரதான வழிநடத்தல் குழுவில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இறுதியாக பக்குவமாகவும், சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும், செயற்பட்டால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் வடக்கிலும், தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்துவிளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதிலே நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலைப் பேணி செயற்படவேண்டும்.
கடந்த கால அனுபவங்களுடன் பார்க்கையில் தற்போது உருவெடுத்துள்ள இனவாதம் எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளும் பொங்குதமிழை நடத்தியே அவர்களுக்கிருந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டனர். சில விடயங்களில் அவ்வப்போது விட்ட தவறுகள் எங்களுக்கு படிப்பினையாக உள்ளன.