அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

🕔 June 25, 2015

Arrestநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் விடுத்த எழுத்து மூல வேண்டுகோளையடுத்தே, பொலீஸார் மேற்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புப் சபையில் 500 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதற்கான நியமனம் வழங்கும் விடயத்தில் பணமோசடி இடம்பெற்றுவருவதாக வதந்திகள் பரவத் தொடங்கின. இது குறித்து மிகவும் விழிப்பாக இருக்குமாறு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தனது செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச் சேர்ந்த ஐ. கிருபேஸ்வரன் என்பவரை பெலவத்தை, பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள மேற்படி அமைச்சுக்கு அழைத்து, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் நயீமுல்லாஹ் என்று – தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட போலி நபர் ஒருவர், நேர்முகப் பரீட்சை மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவரிடமிருந்து 03 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு, நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தார்.

தனக்கு வழங்கப்பட்ட கடிதம் போலியானது என்பதை பின்னர் அறிந்து கொண்ட கிருபேஸ்வரன், இதுபற்றி பிரத்தியேகச் செயலாளரிடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து,  இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மோசடிக்காரர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் நயீமுல்லாஹ்  வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய, மிகவும் சூட்சுமமாகச் செயல்பட்ட பொலீஸார், குறித்த மோசடியாளர்களுடன் கிருபேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வைத்து, மருதானையில் இருவேறு இடங்களில் மேற்படி இருவரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பில்  நற்பிட்டிமுனையைச் சேர்ந்த பிறிதொரு நபரைத் தேடிக் கண்டுபிடிப்பதிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்,  இது போன்று இன்னும் சில மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகவும் பொலீஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அறியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் – அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பாளராகச் செயற்பட்டவர் என இணையத்தளமொன்றில் வெளிவந்த தகவல் குறித்து, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரிடம் வினவியபோது; “குறித்த நபர் – அவரது பிரதேசத்தில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர் என்பதைத் தவிர, அமைச்சர் ரஊப் ஹக்கீமின் எந்தவொரு அமைச்சிலும், எக்காலத்திலும் இணைப்பாளர் பதவியொன்றினை வகிக்கவில்லை” எனக் கூறினார்.

மேலும்,  அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கீழுள்ள எந்தவொரு நிறுவனத்திலாவது, இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அறிய வந்தால், தகவலறிந்தவர்கள் – உடனடியாக அதுபற்றி தமது கவனத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்