மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம்

🕔 September 21, 2016

naeemullah-011– றிசாத் ஏ காதர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளரும், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய அந்தரங்கச் செயலாளரும், மைத்துனர் முறையானவருமான மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளர் பதவியினை வகிப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்களை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளராக, மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர் பதவி வகிக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 258, கட்டுகஸ் தோட்டை வீதி, கண்டி எனும் முகவரியை அலுவலகமாகக் கொண்டு இந்தக் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய மைத்துனர் முறையான உறவு முறைக்காரராவார். மேலும், ஹக்கீமுடைய அந்தரங்கச் செயலாளராகவும், இவர் பணிபுரிந்து வருகின்றார்.

இதேவேளை, மு.காங்கிரசின் பிரதித் தவிசாளராகவும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் நயீமுல்லாஹ் பதவி வகிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், “முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளர் பதவியை வகிக்கும் நயீமுல்லாஹ், எவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் முக்கிய பதவிகளை வகிக்க முடியும்” என்று, மு.கா. முக்கியஸ்தர் ஒருவர் கேள்வியெழுப்புகின்றார்.

“முஸ்லிம் காங்கிரசை முழுமையாக நேசித்து, அந்தக் கட்சிக்காக உழைப்பவர்கள் எவரும், இன்னொரு கட்சியில் அங்கத்துவம் வகிக்கவோ அல்லது வேறொரு கட்சியில் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவோ மாட்டார்கள்” என்றும், மேற்படி முக்கியஸ்தர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்