ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி
தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் போது, துமிந்த சில்வா மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான துமிந்த சில்வா, இலங்கையில் ஸ்ரீஜெயவர்த்தனபுர வைத்தியசாலையிலும் பின்னர் சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையிலும் சிகிச்சைகளைப் பெற்றார்.
எவ்வாறாயினும், பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு, சில தினங்களுக்கு முன்னர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது தந்தையின் தலையில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட படமொன்றினை, நேற்று முன்தினம் பாரத லக்ஸ்மனின் புதல்வியும் நாடாளுமன்ற உறுப்பினருான ஹிருனிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, தனது சகோதரன் துமிந்த சில்வா காயப்பட்ட நிலையில், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட படங்களை, நேற்று செவ்வாய்கிழமை, தனது பேஸ்புக் பக்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வாவின் சகோதரி, திலினி சில்வா பதிவேற்றியுள்ளார்.