சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம்

🕔 September 7, 2016

Article - MTM - 0122
– முகம்மது தம்பி மரைக்கார் –

‘இலங்கை – இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம்’ என்று, முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தினால்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆயினும், அந்த ஒப்பந்தத்தினால் வடக்கு – கிழக்கு முஸ்லிம்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை. மாறாக, முஸ்லிம்கள் அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்பதனாலேயே, அஸ்ரப் அவ்வாறு கூறியிருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடு காரணமாக, தமிழர் – சிங்களவர்களிடையே பகைமை ஏற்பட்டுள்ளதைப் போலவே, தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலும் ஒரு வகைக் குரோத மனப்பான்மை தோன்றிற்று என்பது கசப்பான உண்மையாகும். அந்தப் பகைமையும், குரோதங்களும்தான் ஏராளமான கெடுதிகளுக்குக் காரணமாகவும் அமைந்துள்ளன.

இன முரண்பாடுகளுக்கான தீர்வினைக் காண வேண்டுமென, அவ்வப்போது ஆட்சியாளர்கள் விரும்பியபோதும், இனங்களுக்குள் ஏற்பாட்டுள்ள பகைமையும், குதோதமும் அதற்கு வழி விடுவதாக இல்லை. ஒற்றையாட்சி முறைமையில் இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண முடியாது என்கிறார்கள் தமிழர்கள். ஒற்றையாட்சிக்கு அப்பாலான தீர்வுகளுக்குச் சென்றால், நாடு பிரிந்து விடும் என்று சிங்களவர்கள் அச்சமூட்டுகின்றனர். ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை வழங்கி விடக் கூடாது, அது கிழக்கு முஸ்லிம்களை மிக மோசமாகப் பாதித்து விடும்’ என்று முஸ்லிம்கள் கூறுகின்றார்கள். இந்த கோரிக்கைகளும், கோசங்களும் இன முரண்பாடுகளுக்கான தீர்வினைக் காண்பதிலுள்ள சிக்கல்களை மேலும் அதிகமாக்கிக் கொண்டே செல்கின்றன.

இனப் பிரச்சினைக்கான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதில், அநேகமாக எல்லாத் தரப்பினரும் ஒன்றுபட்ட மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால், அதை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதில்தான் மாறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சமூகத்துடன், முஸ்லிம்கள் ஒன்றிப் பிணைந்திருந்தனர். தமிழ் விடுதலைப் போரட்ட இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர். ‘தமிழ் பேசும் மக்கள்’ என்கிற பொதுமையின் கீழ் – முஸ்லிம்களை தமிழ் சமூகம் அடையாளப்படுத்தியது. ஆனால், ‘தமிழ் பேசும் மக்கள்’ என்கிற அந்தப் பொதுமையான அடையாளத்தின் பின்னால், ஓர் அரசியல் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான இந்த நெருக்கமானது 1980 களில் அகத்திலும், 1990 களில் புறத்திலும் உடையத் தொடங்கியது. தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டமானது, தமிழர்களுக்கானதாக திசை மாறத் தொடங்கியது. ஏன் இப்படியானது என்பதற்கு, இரண்டு சமூகத்தவர்களும் பரஸ்பரம் ஒவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இந்த உடைவும் பிளவும், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்துப் பேசப்படும்போது கூட, ஒவ்வொரு சமூகத்துக்கும், தனித் தனியான நிவாரணங்களைக் கோரி நிற்குமளவுக்கு நிலைமையினை தீவிரமடையச் செய்துள்ளது.

இதுவெல்லாம் பழைய கதைகள் என்றாலும், மீள மீளப் பேசப்பட வேண்டியவையாகும்.

இப்போது, புதிய அரசியல் யாப்பொன்றினை அறிமுகப்படுத்துவதனூடாக இனப் பிரச்சினைக்கான தீர்வொன்று முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீர்வுத் திட்டத்தினூடாக ஒவ்வொரு சமூகமூம் தமக்கு எதையெல்லாம் வழங்க வேண்டுமென, கோரிக்கை விடத் தொடங்கியுள்ளன. அத்தோடு, அடுத்த சமூகங்களுக்கு எதையெல்லாம் கொடுக்கக் கூடாது என்றும் கூற முற்படுகின்றன.

தீர்வுத் திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து, வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறித்து அறிவோம். ‘இலங்கையில் இரண்டு மாநிலங்கள் அமைய வேண்டும். அவை தமிழர்களுக்கும் சிங்கவர்களுக்குமானதாக இருக்கும். வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதனை தமிழர்களுக்கான மாநிலமாக்க வேண்டும். ஏனைய ஏழு மாகாணங்களையும் இணைந்து சிங்களவர்களுக்கான மாநிலமாக்க முடியும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சமமான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தமிழர்களுக்கான வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனியானதொரு ஆட்சியலகு வழங்கப்படும். அதேபோன்று, மலையகத் தமிழர்களுக்கான ஓர் ஆட்சி அலகு, சிங்கள மாநிலத்தில் அமைய வேண்டும்’ என்பதுதான் வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய பிரேரணையின் சாரம்சமாகும்.

வடக்கு மாகாணசபையின் இந்தப் பிரேரணையானது முஸ்லிம்களிடையே விசனத்தை ஏற்படுத்தியது. வடக்கு – கிழக்கினை இணைத்து, அதனுள் தமக்கான ஒரு தீர்வு வழங்கப்படுவதை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று, கிழக்கு முஸ்லிம்கள் கோசமிடத் தொடங்கியுள்ளனர். இவ்வாறாதொரு நிலையில், வடக்கு – கிழக்கினை இணைப்பது தொடர்பிலும், அதற்கான ஆதரவினை பெற்றுக் கொள்ளும் பொருட்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் – முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் அரங்கில் கதைகள் அடிபடத் தொடங்கியுள்ளன. வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்களாயின், இணைந்த வட – கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியினை முஸ்லிம்களுக்கு வழங்க, தாம் தயாராக இருக்கின்றோம் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் பகிரங்கமாக அறிவிருத்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதனூடாக தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தலைமையில் ‘சுதந்திர கிழக்கு’ எனும் பெயரில், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிரான வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை – ஏறாவூரில் விழிப்புணர்வுக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் உரை, இங்கு அதிகம் கவனிப்புக்குள்ளானது.

‘கிழக்கு மாகாணம் தொடர்பாக தமிழ் தலைமைகள் பேசுவதாக இருந்தால், கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளுடனும், புத்திஜீவிகளுடனும்தான் பேசவேண்டும். கிழக்கு தொடர்பில் கிழக்குக்கு வெளியேயுள்ள தலைமைகளுடன் பேச முடியாது’ என்கிற கோசத்தினை அதாஉல்லா அங்கு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், ‘வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென்று தமிழ் தலைமைகள் வேண்டி நிற்கின்றன. அதற்கு முஸ்லிம் சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கோருகின்றார்கள். அவ்வாறு ஆதரவு வழங்கினால், இணைக்கப்பட்ட வட – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியினை முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என்று தமிழ் தலைவர்கள் கூறுகின்றார்கள். இது போக்கணங்கெட்ட பேச்சாகும்’ என்று, தனது உரையில் அதாஉல்லா விசனம் தெரிவித்தார். பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் முஸ்லிம்கள் சோரம்போய் விடுவார்கள் என்கிற மனப்பதிவின் வெளிபாடாகவே, தமிழ் தலைவர்களின் மேற்படி கூற்றினைப் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதாஉல்லா கூறினார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில், தமிழர் தரப்பு – முஸ்லிம் காங்கிரசுடன் பேசியதாக, இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் அந்தக் கட்சி இதுவரை அதிகாரபூர்வமாகக் கூறவில்லை. இருந்தபோதும், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி என்கிற அந்தஸ்து முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளது. எனவே, வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், கிழக்கு முஸ்லிம்களின் ஆதவினைப் பெறும் பொருட்டு தமிழர் தரப்பு பேசுவதாக இருந்தால், முஸ்லிம் காங்கிரசுடன்தான் முதலில் பேசும் என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதில், மு.காங்கிரஸ் தலைமையானது ஓர் இணக்கமான மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு சாதகமானதொரு நிலைப்பாட்டிலேயே, மு.காங்கிரசின் தலைவர் உள்ளார் என்று, அந்தக் கட்சிக்குள்ளிருப்பவர்களில் கணிசமானோர் நம்புகின்றனர். ஆனால், வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், மு.கா. தலைமை சாதகமானதொரு நிலைப்பாட்டினை எடுப்பதில், அந்தக் கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்களில் பலருக்கு உடன்பாடு கிடையாது. இதனை கடந்த வியாழக்கிழமையன்று அம்பாறை மாவட்டம் பாலமுனையில் நடந்த நிகழ்வொன்றில் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில், கடந்த வியாழக்கிழமை பாலமுனையில் நிகழ்வொன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அங்கு மு.கா. தலைவர் முன்னிலையில் நிகழ்வுக்குத் தலைமை வகித்த சட்டத்தரணி அன்சில் உணர்வுபூர்வமானதொரு உரையினை ஆற்றினார். அவரின் உரையில்; வடக்கு – கிழக்கு இணைப்புக்கு மு.காங்கிரஸ் ஆதரவளித்து விடக்கூடாது என்றும், அதில் மு.கா. தலைமை உறுதியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ‘வடக்கும் – கிழக்கும் இணைந்திருந்தபோது இங்கு எந்தவித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை. வடக்கிலிருந்து கிழக்குப் பிரிந்து, எமக்கான அதிகாரம் கிடைத்தபோதுதான் அபிவிருத்திகள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின. எமக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களை இல்லாமலாக்கும் நிலைமை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எமது கட்சி கவனம் செலுத்த வேண்டும். வடக்கு – கிழக்கு இணைந்திருந்த காலத்தில், அதன் செயலாளரின் ஆட்சி நடந்தபோது, அபிவிருத்தியின் பொருட்டு முஸ்லிம் பிரதேசங்களுக்கு நிதிகள் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது கிழக்கில் எமது முதலமைச்சரும், எமது அமைச்சர்களும் இருக்கின்றமையினால்தான் எமக்கு நிதிகள் கிடைக்கின்றன’ என்று அங்கு அன்சில் கூறினார்.

இந்நிகழ்வில், மு.கா. தலைவர் இறுதியாக உரையாற்றினார். ஆனாலும், சட்டத்தரணி அன்சில் சுட்டிக்காட்டிய, வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு வார்த்தையேறும் பேசவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே அரசியல் ரீதியாக நிறையப் பிளவுகளும், பிரிவுகளும் உள்ளன. ஆனால், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டில், இவர்களிடையே பாரியதொரு ஒற்றுமை காணப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ‘சுதந்திர கிழக்கு’ தொடர்பிலான விழிப்புணர்வுக் கூட்டம் ஏறாவூரில் நடைபெற்றபோது, முஸ்லிம் காங்கிரசுக்குள்ளிருந்தும், அதாஉல்லாவுக்கு ஆதரவுகள் கிடைத்தன.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிய வேண்டும் என்பதில், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தீவிரமாக இருந்தார். ‘கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று ஜே.வி.பி.யினர் வழக்குத் தாக்கல் செய்தபோதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான்தான் என்று, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, ‘சுதந்திர கிழக்கு’ – ஏறாவூர் கூட்டத்தில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், அதாஉல்லா – தனது அரசியல் மீள் எழுச்சிக்கானதொரு மந்திரமாகவே ‘சுதந்திர கிழக்கு’ எனும் கோசத்தினைக் கையில் எடுத்துள்ளார் என்பதையும் மறைக்க முடியாது. இருந்தாலும், இந்த மந்திரம் பலிப்பதற்கான சாத்தியங்கள் அதிகபட்சமுள்ளது. ‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான விழிப்பூட்டும் கூட்டங்களை, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நடத்துவற்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா திட்டமிட்டு வருகின்றார்.

‘சுதந்திர கிழக்கு’ எனும் அதாஉல்லாவின் மந்திரத்தின் பின்னால், முஸ்லிம்கள் அணி திரளத் தொடங்குவது, மு.கா.வுக்கு அரசியல் ரீதியாக ஆரோக்கியமாக அமையாது. எனவே, அதாஉல்லாவின் மந்திரத்தை முறிக்கும் வகையிலானதொரு மாற்று மந்திரத்தை மு.கா.வும் கையில் எடுக்க வேண்டியதொரு தேவை எழும்.

நன்றி: தமிழ் மிரர் (06 செப்டம்பர் 2016)

Comments