அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர்

🕔 September 4, 2016
Naseer - Minister - 07– சப்னி அஹமட் –
கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய மத்திய அரசாங்க அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளரிடம், விஷேட பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளேன் என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தின் கீழுள்ள ஹிங்குரானை  தொழிற்துறை திணைக்களத்தின், அம்பாறை மாவட்ட சந்தை விற்பனை நிலையத்தை, கடந்த 27 ஆம் திகதி  உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்கு செல்லவிருந்னர்.

ஆனால், அதற்கு முன்னர் அங்கு சென்ற அமைச்சர் தயா கமகே, மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதோடு, அடாவடித்தனமாக அக்கட்டிடத்தை திரைநீக்கம் செய்து வைத்திருந்தார்.

இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஓர் அமைச்சர் நடந்து கொண்டமையானது மிகவும் கவலை தரும் விடயமாகும்.

வட க்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியாகப் பிரிந்து, கிழக்கு மாகாணமாக மாறி இரண்டாவது முறையாகவும் தன்னுடைய கிழக்கு மாகாண ஆட்சியை முன்னெடுத்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது.

இதனை அமைச்சர் தயா கமகே மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில், மாகாண சபையின் அதிகாரத்தையும், மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளையும் நன்றாக அறிந்தவராவார். இப்படியான ஒருவர் மாகாண சபையின் அதிகாரத்தினை கொச்சைப்படுத்தியதை எண்ணி வேட்கப்படுகின்றேன்.

கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளதை அவர் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

இந்த ஆட்சி மாற்றத்துக்கு முழுமையாக பெரும்பான்மை சமூகம் இருந்த போதிலும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நல்லாட்சியினை உருவாக்கியுள்ளனர். அதன் காரணத்தால்தான், கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்தஸ்த்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில்தான்,  இவ்வாறான செயற்பாட்டினை மிகக் கேவலமாகவும், சிறு பிள்ளைத்தனமாகவும் தயாகமகே காரியங்களை செய்து வருகின்றார். இதற்கு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலபெத்தியும் துணை நின்றதும் கவலையளிக்கின்றது.

அம்பாறையில் தொழில் பேட்டை இல்லாத சூழ்நிலையில், நெல்சிப் திட்டத்தின் மூலம் 40  மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழில் பேட்டை  முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படவிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் அமைச்சர் தயா கமகேயும், அவரின் துணைவியாரும் இணைந்து குடும்ப ஆட்சினை நடாத்திக் காட்டியிருந்தனர். இவர்களின் இச்செயற்பாடுகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளோம்.

இந்த நல்லாட்சியில் மூன்று இன மக்களும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாக இருந்தால், இவ்வாறனவர்களின் செயற்பாடுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தை அடக்கி, கட்டியாள வேண்டும் என்கின்ற நிலைமைக்கு வந்தபோது, அவற்றினை தவிடு பொடியாக்கி, ஒரு சிறந்த நல்லாட்சி அரசினை கொண்டு வந்து காட்டியுள்ளோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திவைக்க விரும்புகின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்