வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்

🕔 September 2, 2016

Ajith Rohana - 0654ம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சகீப் சுலைமான் கடதப்படுவதற்கு, அவரிடம் வேலை செய்து வந்த பாஹிர் அஸ்லம் முகம்மர் என்பவரே காரணமாக இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சகீப் சுலைமான் தொடர்பான பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இதன்போதே மேற்படி விடயத்தையும் அவர் கூறினார்.

வர்த்தகர் சகீப், தனது வியாபார நிலையத்தின் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு –  நம்பிக்கையின் நிமித்தம், பாஹிர் அஸ்லம் மொஹமட் என்பவரை அருகில் வைத்திருந்தார். இந்த நபர் மூலமே குறித்த கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது.

பாஹிர் அஸ்லம் மொஹமட் என்பவர் 08 ஆண்டுகளாக, வர்த்தகர் சகீப் சுலைமானிடம் வேலை பார்த்து வந்தமையினால், நம்பிக்கையின் நிமித்தம் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை கவனிக்கும் பணியில் அவரை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பாரியளவான நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை அறிந்த பாஹிர் அஸ்லம் மொஹமட் என்பவர், இவ்வாறு கப்பம் பெறுவதற்கு திட்டமிட்டதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்ட 08 பேரை கைது செய்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார்.

அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பாஹிர் அஸ்லம் மொஹமட் பாதிக்கப்பட்டார். அவரின் வீட்டை திருத்தும் நடவடிக்கைக்கு, வர்த்தகர் சகீப் சுலைமான் 05 லட்சம் ரூபா பணம் வழங்கியதோடு, சாகிப்பின் மனைவியும் 50,000 ரூபா பணம் வழங்கியிருந்தார்.

சகீப் சுலைமானை கடத்துவதற்கான திட்டம் ஒன்றரை மாதங்களுக்கு தீட்டப்பட்டுள்ளது. கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனம் இரண்டு தினங்களுக்கு முன்னர் 43,000 ரூபாய் பணம் செலுத்தி வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

கடத்தல் சம்பத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவரின் மனைவியுடைய தங்க ஆபரணம் ஒன்றை அடகு வைத்து, வாகனத்துக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களின் நோக்கம் இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவதுதான் எனத் தெரியவந்துள்ளது. ஆயினும், தட்டையான தடி ஒன்றினால் தாக்கப்பட்டதனால் சகீப் சுலைமான் உயிரிழந்ததை கடத்தல்காரர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வௌிநாடு சென்றிருந்த சகீப் சுலைமானின் தந்தை மறுநாள் நாடு திரும்பியதால், மகனை காப்பாற்றுவதற்காக குறித்த பணத்தொகையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் கடத்தல்காரர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், சாகிப் சுலைமான் கடத்தப்பட்ட மறு தினம் பிரதான சந்தேக நபர்  – வழமை போன்று வர்த்தக நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், ஒரு சில தினங்களில் சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும், சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்