புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர்

🕔 August 26, 2016
Naseer - Minister - 013
– சப்னி அஹமட் –

ரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு, வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு, இந்த பரிசோதனையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்ட  விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, சர்வதேச துணையுடன் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கோ. கருணாகரன் தனிநபர் பிரோரணை ஒன்றினை முன்வைத்து நேற்று வியாழக்கிழமை, சபையில் உரையாற்றினார்.

இதற்கு பதிலிக்கும்போதே, சுகாதர அமைச்சர் நசீர் மேற்கொண்ட விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு,  உடற்கூறு வைத்திய பரிசோதணையை மேற்கொள்வதற்கும் ஆலோசணைகளை வழங்குவதற்காகவும், கிழக்கு மாகாணத்துக்கான நிபுணத்துவம் பெற்ற வைத்திய குழுவொன்றை உடனடியாக ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையான வைத்திய பரிசோதனைகளை உடனடியாக வழங்கப்படும்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக, முன்னாள் போராளிகள் மர்மமான நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது. உண்மையில் அவ்வாறு ஒரு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறித்த போராளிகளின் உடற்கூறு பரிசோதனைக்கு எம்மிடம் சிறப்புத்தேர்ச்சி வாய்ந்த சர்வதேச தரமுடைய வைத்திய நிபுணர்கள் உள்ளனர்.

ஆகவே, எம்மிடமுள்ள வைத்திய நிபுணர்களைக்கொண்டு, மாகாண மட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதர சேவைகள் பணிப்பாளரின் தலைமையில், சிறப்பு குழவொன்று அமைக்கப்பட்டு, இக்குழு மூலம் எதிர்வரும் நாட்களில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தரவர்கள், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொண்டு, இவ்வுடக்கூறு பரிசோதனையை செய்து கொள்ளலாம் என்றும் இச்சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், இலங்கையிலுள்ள வைத்திய நிபுணர்களைக்கொண்டே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதேவேளை வடமாகாண சபையிலும் முன்னாள் போராளிகளின் வைத்திய பரிசோதனையை, இலங்கையிலுள்ள வைத்தியர்களைக்கொண்டே நடத்த வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்