தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம்

🕔 August 26, 2016

POrisoner escape - 012விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார்.

தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபாரிசுக்கு இணங்க, மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு, அண்மையில் மாற்றப்பட்டிருந்தார்.

ராசய்யா ஆனந்தராஜா எனும் மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரிடம் முறைப்பாடொன்றினைத் தெரிவித்திருந்தார்.

தனக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ஊசியேற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் – தான்  பல்வேறு அசௌகரியங்கள் உடல் ரீதியாக எதிர்கொள்வதாகவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சந்தேக நபர் கூறியிருந்தார்.

இதனையடுத்து, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், தமிழ் அமைச்சர் ஒருவரிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்திருந்தனர். இதன் பின்னர், வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிச் சந்தேக நபரை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு குறித்த தமிழ் அமைச்சர் சிபாரிசு செய்திருந்தார்.

மேற்படி சந்தேக நபர் தப்பிச் செல்லும் போது, அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இணைந்து – தப்பிச் சென்ற நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்