ஹரீஸ் தொடர்பில் ஹக்கீம் கடுப்பு; தலைவரை மதியாமல் சென்றார் மன்சூர்: நடமாடும் சேவை புதினங்கள்

🕔 August 19, 2016

Hakeem - 087
– அஹமட் –

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ளாத, தமது கட்சியின் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – அதிருப்தியினையும், கடுப்பினையும் வெளியிட்டதோடு, இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் – தான் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் கூறினார்.

மேற்படி நடமாடும் சேவை, நேற்று வியாழக்கிழமை அம்பாறையில் நடைபெற்றது. இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம், நிகழ்வு முடியும் வரை இருந்து செல்லுமாறு கட்சித் தலைவர் ஹக்கீம் வலியுறுத்திக் கூறியபோதும், அதை மதியாமல், நிகழ்வின் இடைநடுவில் மன்சூர் எழுந்து சென்றமையும் அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களிடையே சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது.

நேற்றைய நடமாடும் சேவை நிகழ்வில் உரையாற்றிய மு.கா. தலைவர் ஹக்கீம்  மேலும் தெரிவிக்கையில்;

“மு.காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பிரதியமைச்சர்கள். ஆனால், இந்தப் பிரதியமைச்சர்களில் ஒருவரான எச்.எம்.எம். ஹரீஸ் இன்றைய மக்கள் சேவை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், இங்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் வருகை தந்துள்ளபோதிலும், அவர் இடையில் எங்கோ பயணம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், உங்கள் பயணத்தை வேறொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள், இன்றைய தினம் இந்த நிகழ்வு முடியும் வரை என்னுடன் நீங்கள் இருந்து, மக்கள் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

மக்களுக்கான சேவைகள் நடைபெறும் இதுபோலான நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல், பாராமுகமாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நடப்பவர்கள் தொடர்பில் நான் கடுமையாக இருப்பேன்” என்றார்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், இவ்வாறு உரையாற்றும்போது, மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரைப் பார்த்து, இந்த நிகழ்வில் நீங்கள் இருந்து விட்டுத்தான் போக வேண்டும் எனக் கூறியபோதும், குறித்த நடமாடும் சேவை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இடைநடுவில் மன்சூர் கிளம்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்