நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

🕔 August 14, 2016

Yoshitha - 0887முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சுரேஸ் எதிரிசிங்க எனும் தனது நண்பர் ஒருவரிடமிருந்தே, யோஷித ராஜபக்ஷ கப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுரேஸ் எதிரிசிங்கவின் தந்தை, வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகராவார்.

யோஷித்தவின் நண்பரான சுரேஸ் எதிரிசிங்கவின் வங்கிக் கணக்கிலிருந்து, யோஷித்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குக்கு 04 மில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகளின்போது, மேற்படி பணத்தை யோசித கப்பமாக பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த தொகைப் பணத்தை யோஷித்தவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு, சுரேஸ் எதிரிசிங்க – தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதன்போது, குறித்த பணம் தமக்கு மீளவும்  கிடைக்கும் என்று, தனது தந்தையிடம் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த பணத்தை யோசித ராஜபக்ஷ திருப்பிக் கொடுக்கவில்லை என்றும், அதனைக் கப்ப பணமாக வைத்துக்கொண்டதாகவும் சுரேஷ் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் யோஷித்த மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

பல கோடிஸ்வர வர்த்தகர்களிடம் – மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இவ்வாறு கப்பம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்