புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

🕔 August 7, 2016

Hakeem - Oluvil - 0133
– ஒலுவில் ரமீஸ் – 

லுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, களத்துக்கு வருகை தரவுள்ளார் எனும் செய்திகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்த நிலையில், மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், இன்று ஞாயிற்றுக்கிழமை, கரையோரம் பேனல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ தினைக்கள அதிகாரிகளுடன் ஒலுவில் பிரதேசத்துக்கு வருகை தந்து, கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறிச் சென்றுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறானதொரு நாடகம் நடைபெற்றது.

அன்றைய தினம் பிற்பகல் – கடலரிப்பினைப் பார்வையிடுவதற்கு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் ஒலுவில் பிரதேசத்துக்கு வருவதாக இருந்தது. இதை அறிந்து கொண்ட மு.காங்கிரசின் உள்ளுர் அரசியல்வாதிகள், அமைச்சர் ஹக்கீமை – றிசாத் பதியுத்தீன் வருவதற்கு முன்னதாக, அதே தினம் ஒலுவிலுக்கு அழைத்து வந்தார்கள்.

ரஊப் ஹக்கீம் சென்ற பின்னர், அமைச்சர் றிசாத் பதியுத்தீன் ஒலுவில் கடலரிப்பினைப் பார்த்து விட்டுச் சென்றார்.

இச்சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு வருடமாகும் நிலையில், அமைச்சர்களான ஹக்கீமோ, றிசாத் பதியுத்தீனோ – ஒலுவில் கடலரிப்பினை தடுப்பதற்காக இதுவரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை.

இப்போது ஒரு வருடத்தின் பின்னர் – மீண்டும் ஹக்கீம் வந்துள்ளார். றிசாட் வரப் போவதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் வந்து போவதால் எங்களுக்கு எந்த லாபமுமில்லை. ஒலுவில் கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கையினை இதுவரை இவர்கள் எடுக்கவில்லை. இன்றைய தினமும் ஹக்கீம் வந்துவிட்டு சென்றுள்ளார். ஆனால், எதுவும் நடந்தால் கண்டுகொள்ள வேண்டியதுதான்” என்று அப்பிரதேச மக்கள் ஏமாந்துபோன நிலையில் கூறுகின்றனர்.

அமைச்சர்கள் ஹக்கீமும், றிசாட் பதியுத்தீனும் போட்டி அரசியல் செய்வதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன. ஒலுவில் மக்களின் அழிவில், அதைச் செய்து பார்க்க நினைப்பது கேவலமாகும்.

கடலரித்த இடங்களை வந்து பார்ப்பதும், அதைப் படங்களாக ஊடகங்களில் வெளியிடுவதும், இன்னும் அதிக நாட்களுக்கு இவர்களுக்குக் கைகொடுக்காது.

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை, காலம் இவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும். Hakeem - Oluvil - 0144

Comments

புதிது பேஸ்புக் பக்கம்