ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர்

🕔 August 4, 2016

Hanali+Hakeem - 097

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தினையும் மீளவும் கையளிப்பதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சார்பில், செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும், மு.கா.வின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அஹமட், மேற்படி தகவலை – செயலாளர் ஹசனலியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, செயலாளர் பதவிக்குரிய முழு அதிகாரங்களையும், மீளவும் பெற்றுக் கொள்வதற்குரிய ஆவணங்களை, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வந்து தயாரிக்குமாறு ஹசனியிடம் கூறப்பட்டுள்ளது.

செயலாளரின் அதிகாரங்களை மீளவும் வழங்கும் பொருட்டு, இவ்வாறு ஹசனலி தயாரிக்கும் ஆவணங்களில் தலைவர் ஹக்கீம் கையெழுத்திடத் தயாராகவிருக்கின்றார் என்றும் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை ஹசனலி சார்பானவர்களும் உறுதிப்படுத்தினர்.

ஆயினும், சந்திப்பு இடம்பெற்றதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், அதன்போது பேசப்பட்ட விடங்கள் தொடர்பில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில்,  மு.கா. தலைவருக்கும் – செயலாளர் ஹசனலிக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்