உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம்

🕔 July 9, 2016

Hut - 01
– முன்ஸிப் –

க்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திலுள்ள உணவகத்தில் அமைந்திருந்த குடிசையொன்றின் மேல்தளம் உடைந்து விழுந்ததில், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது.

உடைந்து விழுந்த குடிசை, மரம் மற்றும் பலகையினால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் – மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நண்பர்கள் சிலர் தமது குடும்பத்தினர் சகிதம், இரவு உணவுக்காக மேற்படி உணவகத்துக்குச் சென்றிருந்தனர். இவர்கள் சுமார் 60 பேர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த உணவகத்தில் மரம் மற்றும் பலகையினால் அமைக்கப்பட்டிருந்த மேற்படி குடிசையின் மேற்தளத்தில், சுமார் 25 ஆண்கள் தமது குழந்தைகள் சிலருடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போதே, மேற்தளம் உடைந்து விழுந்துள்ளது.

இதனால், ஆண்களில் பலரும் – அவர்களின் குழுந்தைகளும் காயங்களுக்குள்ளாகினர்.

இதேவேளை, அங்கிருந்த கண்ணாடியினாலான மேசைகள் உடைந்ததாகவும், அவற்றிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகள் பலருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து இடம்பெற்ற போது, பெண்களும் – குழந்தைகளில் பெரும்பாலானோரும் வேறோர் இடத்தில் அமர்ந்திருந்தமையினால், அவர்கள் அதிஷ்டவசமாக ஆபத்தின்றித் தப்பியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, குறித்த குடிசையானது, பாதுகாப்பற்ற வகையிலும், உறுதியாகவும் நிர்மாணிக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாகவே, இந்த விபத்து இடம்பெற்றதாகவும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மற்றொருவர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த 14 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 08 பேர் சிசிக்கை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயினும் இருவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிசிக்கை பெற்று வருவதாகவும், மேலும் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.Hut - 04 Hut - 03 Hut - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்