முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம்
முஸ்லிம்கள் மீது முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமலாகி விடும் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்திலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்தித்து வருகிறார். அவர் வெளியிடும் கருத்துகள் – நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்டுத்தும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த ஆட்சியில் அழுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இற்றைவரை அதற்கெதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் அந்த வன்முறைகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாம் விடுத்த கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப் படவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தால் மத நிந்தனைக்கு எதிரான சட்ட மூலமொன்று கொண்டு வரப்படுமென ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த சட்ட மூலம் இதுவரையில் கொண்டுவரப்படவில்லை. அவ்வாறான சட்ட ஏற்பாடு ஏற்படுத்தப் பட்டிருந்தால், மதங்களை தூஷிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலுமாக இருந்திருக்கும்.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்ற முஸ்லிம்கள் சகல விதத்திலும் பங்களிப்பு செய்துள்ளார்கள். எனினும், முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் புனித இஸ்லாத்தையும், அல்குர்ஆனையும், முகம்மது நபியையும் கொச்சைப்படுத்தும் இனவாதிகளின் செயற்பாடுகள் இந்த ஆட்சியிலும் இடம்பெறுவதையிட்டு முஸ்லிம்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.
எனவே, முஸ்லிம்களுக்கு எதி ரான இனவாத செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுவார்கள் எனவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.