ராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆலோசனை

🕔 June 5, 2016

Lieutenant General A W J C De Silva  - 098லங்கை ராணுவத் தளபதி மற்றும் ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ராணுவத்தினர் ஒத்துழைக்கத் தவறும்பட்சத்தில் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகக் ஆங்கில வார இதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

பல்வேறு படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு ராணுவப் புலனாய்வுத்துறையின் உதவியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர். ஆனால்,  விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களையோ சான்றுகளையோ ராணுவப் புலனாய்வுத்துறை வழங்கி ஒத்துழைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான விசாரணை கல்கிசை நீதிமன்றத்தில் நடந்த போது, விசாரணைக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் வழங்குமாறு ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

லசந்த விசாரணையில், ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிலரின் தொடர்புகள் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்களைக் கோரியுள்ளதாக அறியப்படுகிறது. ஆயினும், லசந்த கொலை தொடர்பான விசாரணைக்கு இலங்கை ராணுவப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் ஒத்துழைக்கவில்லை.

இந்த நிலையில் லசந்த கொலை விசாரணைக்கு ஒத்துழைக்காவிடின், ராணுவத் தளபதி மற்றும், ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு எதிராக, கொலைக் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்க மறுப்பதாக, குற்றவியல் வழக்கை பதிவு செய்யப் போவதாக இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, உயர்மட்டங்களுடன் தொடர்புடைய வழக்குகளில் சான்றுகளை மறைத்த குற்றச்சாட்டில் பல பொலிஸ் உயர் அதிகாரிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்துள்ள நிலையில், ராணுவத்தினரை சட்டத்துக்கு மேலானவர்களாக கருத முடியாது என்று இலங்கை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்