அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

🕔 June 3, 2016

Missing - 097– எப். முபாரக் –

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது முப்ரிஸ் (வயது 15) ஆகியோராவார். இவர்கள் இருவரும் கடந்த 31ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக, நேற்று மாலை கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு மாணவர்களும் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் உள்ள அரபுக் கல்லூரியொன்றில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி கற்று வருகின்றனர். கடந்த 31ஆம் திகதியில் இருந்து இன்று வரை இவர்கள் வீட்டிற்கும் வரவில்லை என்றும், கல்லூரியிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து இரு மாணர்களின் பெற்றார்கள் கூறுகையில்; “மே மாதம் 31ஆம் திகதி இரவு அரபுக் கல்லூரியின் அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் உங்களது பிள்ளைகள் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர்கள் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பி வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இருந்து இரண்டு நாளாக எங்கும் தேடினோம். இருந்தும் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. இதன்காரணமாக கல்லூரி அதிபருடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மாணவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இம்மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 026-2236222 எனும் இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கிண்ணியாப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்