அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை

🕔 June 2, 2016

River - 06
– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனையிலுள்ள கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும் நீர்த்தாவரங்கள் விளைந்து காணப்படுவதாலும் பிரதேச விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிணறுகளை அமைக்கப் பயன்படும் கொட்டுகளைக் கொண்டு தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டது. அப்போது, ஆற்றினைக் கடந்து செல்வதற்கு இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வேறு வழிகள் இல்லாமையினால், குறித்த பாலம் உதவியாக அமைந்தது.

ஆயினும், தற்போது – இந்தப் பாலத்துக்கு மிக அருகில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் புதிய பாலமொன்று அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேற்படி கொட்டுப்பாலத்தினை அகற்றுமாறு இப்பகுதியிலுள்ள விவசாயிகளும், மீனவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுமார் 04 கிலோமீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட இந்த ஆற்றின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள மேற்படி கொட்டுப் பாலத்தின் கீழ்பகுதியில், சுமார் 10 அடி அகலமுள்ள பகுதியினால் மட்டுமே நீர் ஓடுவதற்கான வழி உள்ளது. இதனால், ஆற்றின் நீர் போதியளவு ஓடுவது தடைப்பட்டுள்ளதோடு, பாலத்தினைச் சுற்றி நீர்த்தாவரங்களும் விளைந்து காணப்படுகின்றன.

அட்டாளைச்சேனைப் பகுதியிலுள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் நெல்வயல்களின் மேலதிக நீரானது, இந்த ஆற்றினூடாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கலக்க விடப்படும். ஆனால், அவ்வாறான மேலதிக நீரினை தற்போது கடலுக்குக் கொண்டு செல்வதில், இந்தக் கொட்டுப் பாலம் பாரிய தடையாக உள்ளது என்று, இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான நன்நீர் மீனவர்கள் – மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, தமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான வருமானத்தினைப் பெற்று வந்தனர். ஆனால், இந்தக் கொட்டுப் பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கோணாவத்தை ஆறு நீரோட்டமின்றி மாசடைந்துள்ளமையினால், இந்த ஆற்றில் மீன்களின் பெருக்கம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதனால், இந்த ஆற்றினை நம்பியிருந்த நூற்றுக் கணக்கான நன்நீர் மீனவர்கள் தொழிலிழந்துள்ளனர்.

இன்னொருபுறம், இந்தப் பாலமானது தற்போது கணிசமான அளவு சேதமடைந்துள்ளமையினால், இந்தப் பாலத்தினூடாக வாகனங்கள் பயணிப்பதிலும் அபாயம் உள்ளது.

இதேவேளை, இந்தப் பாலத்தினை புனர்நிர்மாணம் செய்கின்ற பெயரில், தொடர்ச்சியாக அரசாங்க நிதி செலவிடப்பட்டு வருவதோடு, பாலத்தைச் சுற்றி விளைந்து காணப்படும் நீர்த்தாவரங்களை அள்ளி துப்புரவு செய்வதற்காகவும், அடிக்கடி அரசாங்க நிதி செலவிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வாறு பல்வேறு வகையிலும் பொதுமக்களுக்கு பிரச்சினைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தும் மேற்படி கொட்டுப் பாலத்தினை அகற்றுமாறு – அட்டாளைச்சேனைப் பிரதேச விவசாயிகளும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சாத்தியமானால், அகற்றப்படும் பாலத்துக்குப் பதிலாக – பொருத்தமான, புதிய பாலமொன்றினை இந்த இடத்தில் அமைத்துக் கொடுப்பதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உதவ முடியும். அவ்வாறு அமைப்பது மக்களின் போக்குவரத்துக்கு மேலும் வசதியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.River - 11 River - 08 River - 07 River - 05

Comments

புதிது பேஸ்புக் பக்கம்