அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்
🕔 May 31, 2016



– றிசாத் ஏ காதர் –
அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்றும், அதனுடனான கட்டிடமும் இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோணாவத்தைப் பகுதியில் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை வழங்குவதற்கு வசதியாக – எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றினை சர்வதேச தொண்டு நிறுவனமொன்று சில வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்துக் கொடுத்தது.
மேலும், இதனுடன் இணைந்ததாக – மீனவர் ஓய்வு மண்டபம் மற்றும் தங்குமிட வசதிகளுடன் கூடிய கட்டிடங்களும் நிர்மாணிக்கப்பட்டன.
இவற்றினை அமைப்பதற்காக 90 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மேற்படி எரிபொருள் விநியோக நிலையமும், அதனுடன் இணைந்த கட்டிடங்களும் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை பயன்படுத்தப்படாமல் – கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றது. இதனால், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கான பம்பி இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் சேமிக்கும் தாங்கி போன்றவை சேதமடைந்து வருகின்றன.
எனவே, குறித்த எரிபொருள் விநியோக நிலையத்தினை சீராக இயக்கி மீனவர்களுக்கான எரிபொருளினை வழங்கக் கூடிய – பொது நிறுவனமொன்றிடம் கையளிக்குமாறும், மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தினை அவர்களின் பாவனைக்கு வழங்குமாறும் அப்பிரதேச மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Comments



