தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

🕔 March 13, 2016

Mahinda - 0975லங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கணக்குகளை, கணக்காய்வாளர் திணைக்களம் ஆய்வு செய்தபோதே இந்த விபரம் தெரியவந்துள்ளது.

இது தவிர, மஹிந்த ராஜபக்ஷவுக்காக 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒளிபரப்பு நேரம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்புப் பிரிவினால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகேயை ஆங்கில ஊடகமொன்று தொடர்வு கொள்ள முயற்சித்தபோதும், அந்த நடவடிக்கை கைகூடவில்லை.

ஆயினும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நளின் குமார நிஸங்கவை, குறித்த ஆங்கில ஊடகம் தொடர்பு கொண்டு விசாரித்தது. இதன்போது அவர் தெரிவிக்கையில்; மஹிந்த ராஜபக்ஷவை விளம்பரப்படுத்துமாறு, பெரும் பதயிலுள்ளவர்கள்  தம்மை அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது ஐ.ரி.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்களுக்காக 10.1 மில்லியன் ரூபா பணம் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளமை குறித்து, பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, மஹிந்த ராஜபக்ஷவிடம் பல தடவை விசாரணைகளை நடத்தியிருந்தது.

24 நொவம்பர் 2015 தொடக்கம் ஜனவரி 2016 வரை, தனது விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக ஐ.ரி.என். நிறுவனத்துக்கு  மஹிந்த ராஜபக்ஷ  62 மில்லியன் ரூபாவினைச் செலுத்தியிருந்தார். ஆயினும், 10.1 மில்லியன் ரூபா இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், அப்போதைய ஜனாதிபதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக 44 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டிருந்தபோதும், 2.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments