
கண்டி மற்றும் கொஹுவல பிரதேசங்களிலுள்ள இரண்டு தனியார் நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்கள் சுமார் 2,000 பேரிடம் 04 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த நிறுவனங்களின் மூன்று பணிப்பாளர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மற்றும் கொஹுவலவை தளமாகக் கொண்ட இந்த இரண்டு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடியின் மொத்த மதிப்பு சுமார் 04 பில்லியன் ரூபாய் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் இதுவரை 80 முறைப்பாடுகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (21) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



