
– அப்துல் அஸீஸ் –
கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை, இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, மீரிகம தேசிய சாரணர் பயிற்சி நிலையத்தில் வைத்து, நேற்று ’(01) மேஜர் கே. எம். தமீமிடம் வழங்கினார்.
கல்முனை சாரணிய மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், சாரணிய இயக்கத்தின் செயற்பாடுகளை – மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்நியமனம் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.
சாரணிய இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களான தலைமைத்துவம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை, இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்துவதில் – மாவட்ட ஆணையாளரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
அந்த வகையில், மேஜர் கே.எம். தமீமுடைய தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ், கல்முனை சாரணிய மாவட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, சாரணியர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவப் பயிற்சி, ஒழுக்கம், சமூக சேவை மற்றும் இளைஞர்களுக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை விரிவுபடுத்துவதில் அவரது தலைமைத்துவம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மாவட்ட ஆணையாளராகப் பொறுப்பேற்கும் மேஜர் கே.எம். தமீமுக்கு கல்முனை சாரணிய மாவட்டத்தின் சாரணர்கள், சாரணியத் தலைவர்கள், முன்னாள் சாரணியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.



